இந்திய அணி வீரர்கள் பிரிவதற்கு காரணமான ஒரு விஷயத்தை பிசிசிஐ எப்படி முதலில் அனுமதித்தது என இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் இர்பான் பதான் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
தற்போது இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்த அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிக்கையை படித்த பிறகு இர்பான் பதான் மிக முக்கியமான ஒரு விஷயத்தை சுட்டிக்காட்டி இதற்கு முன்பு இதை எப்படி அனுமதித்தீர்கள்? என்று கேட்டிருக்கிறார்.
பிசிசிஐ விதித்த சில முக்கிய கட்டுப்பாடுகள்
பிசிசிஐ தற்போது இந்திய வீரர்களுக்கு விதித்துள்ள கட்டுப்பாடுகளில் வீரர்கள் இனி தனித்தனி ஹோட்டல்களில் தங்கக்கூடாது, மேலும் தனித்தனியாக பயணம் செய்யக்கூடாது, அடுத்து தங்களுக்கு பயிற்சி முடிந்தாலும் கூட, அனைத்து வீரர்களின் பயிற்சி முடிந்த பிறகு ஒன்றாக சேர்ந்து வெளியேற வேண்டும் என வீரர்களின் ஒற்றுமைக்காக சில முக்கிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது.
இத்துடன் வீரர்களின் குடும்பங்கள் 45 நாட்கள் கொண்ட நீண்ட சுற்றுப்பயணத்தில் இரண்டு வாரங்கள் மட்டுமே வீரர்களுடன் தங்க அனுமதிக்கப்படுகிறது. இதுவே உள்நாட்டு தொடர் என்றால் ஒரு வாரம் மட்டுமே வீரர்களுடன் அவர்களது குடும்பம் தங்க முடியும். மேலும் தனிப்பட்ட சமையல் உதவியாளர்கள் மற்றும் தனி மேனேஜர்களை அழைத்துக் கொண்டு வர முடியாது. போட்டி இருக்கும் காலகட்டத்தில் தனிப்பட்ட விளம்பர சூட்டிங் எதிலும் கலந்து கொள்ள கூடாது என்பது போன்ற முக்கிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இர்பான் பதான் கேட்டிருக்கும் முக்கிய கேள்வி
தற்போது இந்த கட்டுப்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பி இருக்கும் இர்பான் பதான் பேசும் பொழுது ” இந்திய அணியில் கடந்த காலங்களில் மிகச்சிறந்த வீரர்கள் கூட தனி ஹோட்டல்களில் தங்குது கிடையாது. அவர்கள் எல்லா வீரர்களும் தங்கும் அதே ஹோட்டலில் தங்கினார்கள். இப்பொழுது எல்லோரும் ஒரே ஹோட்டலில் தங்க வேண்டும் என்றால், இதற்கு முன்பு எப்படி தனித்தனி ஹோட்டல்களில் வீரர்கள் தங்க அனுமதித்தீர்கள்? என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : 6 சதம்.. 752 ரன்.. ஆனாலும் கருண் நாயரை டீம்ல எடுக்க மாட்டாங்க.. காரணம் இதுதான் – தினேஷ் கார்த்திக் பேட்டி
இதை இர்பான் பதான் டிவிட்டரில் பதிவு செய்ய, அதில் இந்திய கிரிக்கெட் ரசிகர் ஒருவர் நீங்கள் விராட் கோலியை குறிப்பிட்டு இப்படி கேட்டு இருக்கிறீர்களா? என்று கமெண்ட் செய்திருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள இர்பான் பதான் விராட் கோலியை தனிப்பட்ட முறையில் குறிப்பிடவில்லை என்று விளக்கம் அளித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.






