இவர் தான் பஞ்சாப் அணியின் அடுத்த மிகப் பெரிய வீரராக திகழ்கிறார் – இர்பான் பதான் நம்பிக்கை

0
46
Irfan Pathan

நடப்பு ஐ.பி.எல் தொடரில் இந்திய நட்சத்திர வீரர்கள் சறுக்கிக் கொண்டிருக்க, இந்திய இளம் வீரர்கள் அசத்திக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக இளம் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள். அதிலும் குறிப்பாக இடக்கை இளம் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள். இதில் மிக முக்கியமான வீரராக, பல முன்னாள், இந்நாள் வீரர்களின் கவனத்தைப் பெற்றவராக இருக்கிறார், பஞ்சாப் வீரரான, ஐ.பி.எல்-ல் பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும், 23 வயதான இளைஞர் அர்ஷ்தீப் சிங்!

2018ஆம் ஆண்டு பஞ்சாப் அணிக்கா லிஸ்ட் ஏ போட்டிகளில் அறிமுகமானவர், 2019ஆம் ஆண்டு முதல்தர போட்டிகளிலும், இருபது ஓவர் போட்டிகளிலும் பஞ்சாப் அணிக்காக அறிமுகமானவர். இதே ஆண்டில் ஐ.பி.எல்-ல் பஞ்சாப் அணிக்காக இருபது இலட்ச ரூபாய்க்கு வாங்கப்பட்டு அறிமுகமானார்.

- Advertisement -

2019ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் மூன்று ஆட்டங்களில் விளையாடிய இவர், 109 ரன்களை விட்டுக்கொடுத்து 10.90 என்ற எகானமியில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். ஆனால் அடுத்தடுத்த வருடங்களில் இவரது பந்துவீச்சின் கூர்மை அதிகரித்து, 2020ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் எட்டு ஆட்டத்தில் ஒன்பது விக்கெட்டை 8.77 என்ற எகானமியில் கைப்பற்றினார். அடுத்து ஆண்டான 2021ல் 12 ஆட்டங்களில் 18 விக்கெட்டை 8.27 என்ற எகானமியில் கைப்பற்றினார். இந்தச் செயல்பாடுதான் இந்த ஆண்டு இவரை பஞ்சாப் அணி நான்கு கோடிகளுக்கு தக்கவைக்க வைத்தது. இந்த ஐ.பி.எல் தொடரிலும் இவரது செயல்பாடு மிகப் பிரமாதமாய் இருக்கிறது. மொத்தம் 13 போட்டிகளில் 10 விக்கெட்டுகளை 7.83 எகானமியில் கைப்பற்றி இருக்கிறார்.

இவரது இப்படியான சிறப்பான செயல்பாட்டை பற்றி, இந்திய அணியின் முன்னாள் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் கூறும்பொழுது “அர்ஷ்தீப் ஒரு சிறப்பு வீரர். அவர் இளமை, வேகம், துல்லியத்தோடு இருக்கிறார். ஸ்ட்ரைக்கில் எம்.எஸ்.தோனி, ஹர்திக் பாண்ட்யா என யார் இருந்தாலும், அமைதியாக சிறப்பாகச் செயல்படுகிறார். அவர் எப்படியான திறமையைக் கொண்டிருக்கிறார் என்பதை அவரது வளர்ச்சி விகிதம் காட்டும். அவரது வளர்ச்சி அபரிமிதமானது. சர்வதேச கிரிக்கெட்டில் தன்னை நிரூபித்த ககிசோ ரபாடா இருக்கும் போது, ஒரு இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர் அங்கீகாரம் பெறுவது, அவர் எவ்வளவு திறமையானவர் என்பதை காட்டுகிறது. இவர் பஞ்சாப் மற்றும் பஞ்சாப் கிங்ஸ்க்கு பெரிய விசயமாக இருக்க போகிறார்” என்று புகழ்ந்து கூறியுள்ளார்!

- Advertisement -
- Advertisement -