ஐபிஎல் ; ரிஷப் பண்ட் இல்லாத நிலையில் டெல்லி அணிக்கு புதிய கேப்டன் அறிவிப்பு!

0
3869
DC

இந்தியாவின் விளையாட்டு திருவிழாவான இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் மார்ச் 31ஆம் தேதி துவங்கி மே 28ஆம் தேதி நிறைவடைய இருக்கிறது!

இந்தத் தொடருக்குப் 10 அணிகளை இரு குழுக்களாகப் பிரித்து, ஒரு குழுவில் உள்ள அணி இன்னொரு குழுவில் உள்ள ஐந்து அணி உடன் தலா இரண்டு ஆட்டங்களிலும், தன்னுடைய குழுவில் உள்ள மற்ற நான்கு அணிகளுடன் ஒரு ஆட்டத்திலும் என மொத்தம் 14 போட்டிகள் விளையாடும். அடுத்து ப்ளே ஆப்ஸ் அடுத்து இறுதிப் போட்டி!

- Advertisement -

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்த முறை ஐபிஎல் தொடர் மீண்டும் அணிகளின் சொந்த மைதானங்களில் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. பத்து அணிகளுக்கும் தலா ஏழு போட்டிகள் சொந்த மைதானத்தில் கிடைக்க இருக்கின்றன. இந்த தொடரின் முதல் போட்டி அகமதாபாத் மைதானத்தில் குஜராத் சென்னை அணிகளுக்கு இடையே மார்ச் 31ஆம் தேதி நடக்க இருக்கிறது!

இந்த நிலையில் ரிஷப் பண்ட் எதிர்பாராத விபத்தில் சிக்கி தற்பொழுது குணமடைந்து வருகின்ற காரணத்தால் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு விளையாட முடியாமல் இருப்பதால், டெல்லி அணி நிர்வாகம் புதிய கேப்டனை அறிவித்து இருக்கிறது!

இந்த முறை டெல்லி அணி நிர்வாகம் புதிய வீரர்கள் யாரிடமும் செல்லாமல், ஏற்கனவே ஐபிஎல் தொடரில் கேப்டன்சி செய்து கோப்பையையும் வென்றுள்ள டேவிட் வார்னரிடம் சென்றுள்ளது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு அடுத்து டேவிட் வார்னர் டெல்லி அணிக்கு இந்த சீசன் கேப்டன்சி செய்ய இருக்கிறார்!

- Advertisement -

2015 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை டேவிட் வார்னர் ஹைதராபாத் அணிக்கு கேப்டன்சி செய்திருக்கிறார். இதில் நடுவில் 2018 ஆம் ஆண்டு அவர் பங்கேற்கவில்லை. கேப்டன்சி பொறுப்பை ஏற்ற இரண்டாவது ஆண்டு 2016ல் கோப்பையை வென்று அசத்தினார். மேலும் கேப்டனாக மட்டுமல்லாமல் வீரராகவும் அந்தத் தொடரில் 848 ரன்கள் குவித்தார்.

டேவிட் வார்னர் ஐபிஎல் தொடரில் கேப்டனாக மொத்தம் 67 போட்டிகளை சந்தித்து இருக்கிறார். இதில் 35 வெற்றிகளையும் 30 தோல்விகளையும் சந்தித்திருக்கிறார். இரண்டு ஆட்டங்கள் முடிவில்லாமல் போயிருக்கிறது. இவரது கேப்டன்சி வெற்றி சதவீதம் ஐபிஎல் தொடரில் 53.73!

இதேபோல் ஹைதராபாத் அணியும் இன்று தனது புதிய கேப்டனாக தென்னாபிரிக்காவை சேர்ந்த வலது கை பேட்ஸ்மேன் எய்டன் மார்க்ரம்மை அறிவித்து இருக்கிறது. இவர் சன்ரைசர்ஸ் அணிக்காக தென் ஆப்பிரிக்கா டி20 லீக்கில் கேப்டனாக இந்த வருடம் கோப்பையை வென்று தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது!