ஐபிஎல் ஏலம்.. சிஎஸ்கே-விடம் இருந்து டிராவிஸ் ஹெட்டை தட்டிப்பறித்த ஹைதராபாத்.. சென்னை வாங்க நினைத்தது ஏன்?

0
798
Ipl

17வது ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம் இந்த ஆண்டு இறுதியான டிசம்பர் மாதத்தில் இன்று துபாயில் நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

மெகா ஏலத்திற்கு முன்பான மினி ஏலம் என்கின்ற காரணத்தினால் நிறைய முன்னணி வீரர்கள் ஏலத்தில் இல்லை. இதன் காரணமாக குறைவான வீரர்களுக்கு அதிக அணிகள் போட்டி போடும் நிலை உருவாகி இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் இன்று மதியம் ஒருமணி அளவில் ஐபிஎல் மினி ஏலம் துவங்கியது. முதலில் வெஸ்ட் இண்டீஸ் டி20 கேப்டன் ரோமன் பவல் ஒரு கோடி ரூபாய்க்கு வந்தார். அவரை டெல்லியுடன் போட்டியிட்டு கொல்கத்தா 7.40 கோடிக்கு வாங்கியது.

இதற்கு அடுத்து தென் ஆப்பிரிக்காவின் ரூசோவ் அடிப்படை விலையான இரண்டு கோடி ரூபாய்க்கு வந்தார். அவரை எந்த அணிகளும் வாங்கவில்லை. இதேபோல் இந்தியாவின் கருண் நாயர், மனிஷ் பாண்டே மற்றும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்மித் ஆகியோரையும் வாங்கவில்லை.

கடந்த ஏலத்தில் 13 1/2 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட இங்கிலாந்தின் ஹாரி புரூக்கை வாங்க டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் போட்டியிட்டன. முடிவில் டெல்லி அணி 4 கோடி ரூபாய்க்கு அவரை வாங்கியது.

- Advertisement -

இதற்கு நடுவில் ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரர் டிராவிஸ் ஹெட் தனது அடிப்படை விலையான இரண்டு கோடி ரூபாய்க்கு ஏலத்திற்கு வந்தார். இவரை ஆரம்பத்தில் வாங்க எந்த அணிகளும் போட்டியிடவில்லை.

இந்த நிலையில் இறுதி நேரத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கையை உயர்த்தியது. உடனே யாரும் எதிர்பார்க்காத விதத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் களத்திற்கு வந்தது. இந்த இரு அணிகளுக்கும் இடையே ஹெட்டை கைப்பற்ற போட்டி நடந்தது.

இறுதியாக இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6.80 கோடி ரூபாய்க்கு ஹெட்டை வாங்கியது. ஆஸ்திரேலியாவின் பயிற்சியாளர் குழுவில் இருக்கும் டேனியல் வெட்டேரி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹெட்டை வாங்கிய பின்னணியில் இவரது பங்கு இருக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மொயின் அலி கிடைப்பதில் சில சிக்கல்கள் இருக்கிறது. எனவே அவரைப் போலவே இடதுகை பேட்ஸ்மேன் மற்றும் வலதுகை ஆப் ஸ்பின் வீசக்கூடிய டிராவிஸ் ஹெட்டை வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ் ஆர்வம் காட்டியது. ஆனால் கடைசி நேரத்தில் போட்டியிலிருந்து விலகிக் கொண்டது குறிப்பிடத்தக்கது. முதல் செட் வீரர்கள் ஏலம் தற்பொழுது முடிவுக்கு வந்திருக்கிறது!