ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ஆர் சி பி அணி தங்களுடைய சொந்த மைதானமான பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடர்ந்து மூன்றாவது போட்டியில் தோல்வியை தழுவி இருக்கிறது. இந்த நிலையில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது மழை பாதிப்பு ஏற்பட்டதால் ஆட்டம் 14 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இந்த சூழலில் நேற்று ஆட்டத்தில் ஆர்சிபி அணி ஒரு கட்டத்தில் 42 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்து தடுமாறியது என்று சூழலில் டிம் டேவிட் அதிரடியாக ஆடி 26 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதன் மூலம் ஆர் சி பி அணி 95 ரன்கள் என்ற கௌரவமான இலக்கை எட்டியது. எனினும் இந்த இலக்கை பஞ்சாப் அணி 11 பந்துகள் எஞ்சிய நிலையில் வெற்றி பெற்றது. இதனால் ஆர்சிபி அணி நேற்றைய ஆட்டத்தில் கூடுதலாக ஒரு 20 ரன்கள் அடித்து இருந்தால் நேற்றைய போட்டியில் பஞ்சாப் தோற்று இருக்க கூட வாய்ப்பு இருக்கும்.
14 ஓவர் என்பது நேரம் இருந்திருக்கும்:
இந்த நிலையில் விராட் கோலி நேற்றைய ஆட்டத்தில் மூன்று பந்துகளை எதிர் கொண்டு ஆட்டம் இழந்தது ஆர்சிபி அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முகமது கைஃப், “நேற்றைய ஆட்டத்தில் ஆர்சிபி அணிக்கு 84 பந்துகள் ஒரு இன்னிங்ஸில் கிடைத்தது. 84 பந்துகள் என்பது கொஞ்சம் நீண்ட போட்டி தான். விராட் கோலி நேற்றைய ஆட்டத்தில் சிக்ஸர் அடிப்பதற்காக முயற்சி செய்தார்.”
“இந்த போட்டி 20 ஓவராக இருந்திருந்தால் நிச்சயம் விராட் கோலி ஆரம்ப கட்டத்தில் இப்படி ஒரு ஷாட்டை முயற்சி செய்திருக்கவே மாட்டார். அந்த பந்தை லேசாக தட்டி விட்டு ரன் ஓடி இருப்பார் என்பதை நிச்சயமாக சொல்ல முடியும். ஆனால் 14 ஓவர் போட்டி என்பதால் விரைவாக அடிக்க வேண்டும் என விராட் கோலிக்கு தோன்றியிருக்கிறது.”
கோலி செய்தது தவறு:
“இதனால் தான் அவர் இந்த ஷாட்டை ஆடி நேற்று ஆட்டம் இழந்தார். அது மட்டுமில்லாமல் ஆடுகளம் நேற்று கொஞ்சம் ஈரமாக இருந்ததால் பந்து நின்று வந்தது. இந்த ஆடுகளத்தில் விராட் கோலி இன்னும் கொஞ்சம் பொறுமை காத்து ஐந்து ஆறு பந்துகளுக்கு பிறகு அதிரடியை காட்டி இருக்க வேண்டும்.விராட் கோலி மட்டுமல்ல மற்ற அனைத்து வீரர்களும் இதே தவறை தான் செய்தார்கள்.”
இதையும் படிங்க: 2 பேர் மனசு வச்சா.. சிஎஸ்கே பிளே ஆப்ல இருக்கும்.. மீண்டும் கிடைத்த செம சான்ஸ் – என்ன நடக்க வேண்டும்?
“கொஞ்சமாவது ஆடுகளத்தில் நேரத்தை செலவழித்திருக்கலாம். 14 ஓவர் என்பது நிறைய நேரம் இருந்திருக்கிறது. ஆனால் விராட் கோலி இதை 6 ஓவர் போட்டி என்று நினைத்துக் கொண்டு விளையாடி இருக்கிறார் என நினைக்கின்றேன்” என முகமது கைஃப் கூறியுள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் 3 போட்டியில் விளையாடின விராட் கோலி மொத்தமாக 30 ரன்கள் தான் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.






