18வது சீசனுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் கடைசி லெக் போட்டிகள் நாளை தொடங்க உள்ளது. இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையில் போர் பதற்றம் எழுந்தது. இதனால் மே 8ம் தேதியில் இருந்து ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் போர் பதற்றம் முடிவடைந்த சூழலில், ஐபிஎல் தொடரை தொடங்க முடிவு எடுக்கப்பட்டது.
இதன்பின் புதிய அட்டவணையும் வெளியிடப்பட்டது. அதன்படி மே 17ம் தேதி நடக்கவுள்ள போட்டியில் ஆர்சிபி அணியை எதிர்த்து கேகேஆர் அணி விளையாட உள்ளது. பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நடக்கும் போட்டி என்பதால் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆர்சிபி அணியை பொறுத்தவரை 11 போட்டிகளில் விளையாடி 8 வெற்றி, 3 தோல்வியுடன் 16 புள்ளிகள் எடுத்து 2வது இடத்தில் உள்ளது.
ஆர்சிபி vs கேகேஆர்
அடுத்த 3 போட்டிகளில் ஒன்றில் வென்றால் கூட எளிதாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும். அதேபோல் கேகேஆர் அணியை பொறுத்தவரை 12 போட்டிகளில் 5 வெற்றி, 6 தோல்வியுடன் 11 புள்ளிகள் பெற்று 6வது இடத்தில் உள்ளது. அடுத்த 2 போட்டிகளில் ஒன்றில் தோற்றால் கூட கேகேஆர் அணியின் பிளே ஆஃப் கனவு முடிவுக்கு வந்துவிடும்.
இந்த சூழலில் ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதருக்கு காயம் ஏற்பட்டதாக தகவக் வெளியாகியது. ஆனால் நேற்றைய பயிற்சியின் போது ரஜத் பட்டிதர் நன்றாக பேட்டிங் செய்தார். இருந்தாலும் அவர் நாளைய போட்டியில் களமிறங்குவது கடைசி நேரத்திலேயே முடிவு எடுக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. இல்லையென்றால் இம்பேக்ட் பிளேயராக விளையாடுவார்.
மழைக்கு வாய்ப்பு
இந்த நிலையில் ஆர்சிபி – கேகேஆர் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனென்றால் பெங்களூரில் நேற்று முதலே தொடர் மழை பெய்து வருகிறது. நாளைய ஆட்டத்தின் போது 65 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணிப்பை வெளியிட்டுள்ளது.
இதனால் தட்ப வெட்ப சூழல் அதிகபட்சமாக 31 டிகிரியாகவும், குறைந்தபட்சம் 22 டிகிரியாகவும் இருக்கும். சின்னச்சாமி மைதானத்தில் மழை நீர் வடிகால் வசதி சிறப்பாக செய்யப்பட்டிருப்பதால், மழை நின்றால் கூட அடுத்த 20 நிமிடங்களில் உடனடியாக போட்டியை தொடங்க முடியும். இதனால் ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.





