ஐபிஎல் தொடர் வருகிற 22ஆம் தேதி தொடங்கி மே மாதம் 25 ஆம் தேதி முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு உலகக் கோப்பைக்காக வீரர்களுக்கு ஒரு வாரம் ஓய்வு அளிக்கப்படுகிறது. இந்நிலையில் ஐபிஎல் 2024-லில் கலந்து கொள்ளும் 10 அணிகளுக்கான கேப்டன்கள் மற்றும் அவர்களின் சம்பளம் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.
1.பேட் கம்மின்ஸ்- 20.5 கோடி: சமீபத்தில் நடைபெற்ற மினி ஏலத்தில் சன்ரைசர் ஹைதராபாத் அணி இவரை 20.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இதுவரை கொல்கத்தா அணிக்காக விளையாடி வந்த கம்மின்ஸ் தற்போது சன்ரைசர்ஸ் அணிக்காக கேப்டனாக களமிறங்க உள்ளார். கம்மின்ஸ் ஆஸ்திரேலியா அணிக்கு செய்த சிறப்பான செயல்பாடுகளால், சன்ரைசர்ஸ் சனி தற்போது இவரை கேப்டனாக அறிமுகப்படுத்தியுள்ளது. அதிக சம்பளம் வாங்கும் கேப்டன்களில் தற்போது முன்னணியில் இருப்பதும் இவரே.
2.கே எல் ராகுல் -17 கோடி: 2022 ஆம் ஆண்டு லக்னோ அணி இவரை ஏலத்தில் எடுத்து கேப்டனாக அறிவித்தது. சிறப்பான கேப்டன்சியினால் லக்னோ அணி இருமுறை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இம்முறையும் சிறப்பான கேப்டன்சி தொடரும் பட்சத்தில் லக்னோ அணியை முன்னெடுத்துச் செல்வார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
3.ரிஷப் பந்த்-16 கோடி: டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ரிஷப் பந்த் சமீபத்தில் கார் விபத்தில் சிக்கியதால் 2023ம் ஆண்டு ஐபிஎல் சீசனை தவறவிட்டார். தற்போது முற்றிலும் காயம் குணமாகி இந்த சீசனில் களமிறங்குவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. அதிரடி பேட்ஸ்மேன் ஆன இவர் ஒரு நல்ல கேப்டனாகவும் அணியை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்.
4.ஹர்திக் பாண்டியா -15 கோடி: மும்பை அணியில் முதன் முதலில் அறிமுகமான ஹர்திக் பாண்டியா பின்னர் 2022 ஆம் ஆண்டு குஜராத் அணி இவரை ஏலத்தில் எடுத்து கேப்டன் ஆக்கியது. தனது சிறப்பான பங்களிப்பினால் முதல் சீசனில் குஜராத் அணி சேம்பியன் பட்டத்தை பெற உதவியுடன் அடுத்த சீசனில் இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றார். இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஏலத்தில் மும்பை அணி இவரை குஜராத் அணியிடமிருந்து வாங்கி கேப்டனாக அறிவித்தது.
5.சஞ்சு சாம்சன் -14 கோடி: 2022ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் அறிவிக்கப்பட்டதுடன் 14 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றார். மேலும் அந்த சீசனில் அணியை சிறப்பாக வழி நடத்தி இரண்டாம் இடம் பெற உதவினார். அதிரடி வீரர்களுக்கு பெயர் போன ராஜஸ்தான் அணியும் இம்முறை கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
6.எம் எஸ் தோனி -12 கோடி: மகேந்திர சிங் தோனி 2023 ஆம் ஆண்டு சீசனுக்கு முன்னதாக தனது சம்பளத்தை 15 கோடியில் இருந்து 12 கோடியாகக் குறைத்தார். வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்து கொண்டிருக்கும் தோனி, இதுவரை சென்னை அணிக்கு ஐந்து கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். இந்த சீசன் இவருக்கு கடைசியாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
7.ஸ்ரேயாஸ் ஐயர் -12.25 கோடி: 2022 ஆம் ஆண்டு கொல்கத்தா அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டு கேப்டனாக அறிவிக்கப்பட்டார். கடந்த சீசனில் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியதைத் தொடர்ந்து நித்திஷ் ரானா கொல்கத்தா அணியை வழிநடத்தினார். இம்முறை திரும்பவும் கொல்கத்தா அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
8.ஷிகார் தவான் – 8.25 கோடி: 2022ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் பஞ்சாப் அணியால் சிகார் தவான் வாங்கப்பட்டார். மேலும் கடந்த சீசனில் கேப்டன் ஆகவும் அறிவிக்கப்பட்டு இந்த சீசனிலும் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இம்முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் பஞ்சாப் அணி மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: ஐபிஎல் 2024: விலகிய வீரர்கள் மற்றும் அவர்களுக்கான மாற்று வீரர்கள்.. முழு பட்டியல்
9.சுப்மான் கில் -8 கோடி: குஜராத் அணியில் ஹர்திக் பாண்டியா விலகியதைத் தொடர்ந்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் கில் கேப்டன் ஆக அறிவிக்கப்பட்டுள்ளார். இதுவரை ஒரு பேட்ஸ்மேன் ஆக மட்டுமே தனது திறமையை நிரூபித்து வந்த கில் இம்முறை கேப்டன் ஆகவும் தன்னை நிரூபிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
10.பாப் டூ பிளசிஸ்-7 கோடி: சென்னை அணியின் நம்பிக்கைகுறிய வீரராக இருந்த பிளஸ்சிசை 2022 ஆம் ஆண்டு பெங்களூரு அணி 7 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. பின்னர் எதிர்பாராத விதமாக கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியதை அடுத்து இவரை கேப்டனாக பெங்களூர் அணி நியமித்தது. எனவே இவரது தலைமையில் இம்முறையாவது கோப்பையை வெல்லுமா? என பெங்களூரு அணி ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.