“ஐபிஎல் 2024 தோனியின் கடைசி சீசனா.?” – ஓபனாக பதில் சொன்ன ரெய்னா

0
237

இந்தியன் பிரீமியர் லீக் 2024க்கான சீசன் வருகிற மார்ச் மாதம் 22ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

முதல் போட்டிக்காகத் தற்போது இரு அணி வீரர்களும் தீவிரவலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சீசனில் கோப்பையை வென்ற அதே உத்வேகத்துடன் சென்னை அணி தனது முதல் போட்டியில் பெங்களூர் அணியை எதிர்கொள்கிறது. இதற்காக அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வரும் வேளையில், சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி வருகிற 3ஆம் தேதி சேப்பாக்கத்தில் பயிற்சியை மேற்கொள்ள உள்ளார்.

- Advertisement -

கடந்த சீசனில் விளையாடிய போது கணுக்காலில் காயம் அடைந்த அவர், காயத்துடனே முழு தொடரிலும் விளையாடினார். பின்னர் தொடர் முடிந்து அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் இந்த சீசனில் முழு உடற்தகுதியுடன் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் காயத்திலிருந்து முழுமையாக குணமடைய கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டார் என்று சென்னை அணித் தரப்பிலிருந்து செய்திகள் வெளியாகியது.

இந்நிலையில் தற்போது 42 வயதாகும் மகேந்திர சிங் தோனி இந்த சீசனுடன் ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறப் போகிறாரா? என்ற செய்தி வலுத்து வருகிறது. கடந்த சில வருடங்களாகவே தோனியின் ஓய்வு குறித்து அவரிடம் கேட்கப்பட்ட போது நிச்சயமாக இல்லை. அப்படி நான் ஓய்வு பெற்றால் அது சென்னையில்தான் எனது கடைசி போட்டியாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

ரசிகர்களின் அளவில்லாத அன்பினைப் பிரதிபலிக்கும் வகையில், தோனியும் ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெற மனம் இல்லாமல் விளையாடி வருகிறார். இந்நிலையில் மிஸ்டர் ஐபிஎல் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவிடம் தோனி ஐபிஎல் 2024 முடிந்ததும் ஓய்வு பெறுவாரா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. இது குறித்து குறித்து சில சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்து உள்ளார்.

- Advertisement -

“தோனியின் ஓய்வு பெறும் திட்டம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் அவர் மிகவும் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறார். தோனி மிகவும் பிட் ஆக இருப்பதாக நான் உணர்கிறேன். அவர் சென்னை அணியின் ஜெர்சியில் தொடர்ந்து ரசிகர்களை மகிழ்விப்பார். சென்னை ரசிகர்களும் தோனியின் மீது அளவில்லாத அன்பினை வைத்துள்ளனர்.

அவர் நிச்சயமாக இந்த சீசனில் சிறப்பாக செயல்படுவார் என்று நான் நம்புகிறேன். கிரிக்கெட்டுக்காக தோனி தன்னை அர்ப்பணித்துள்ளார்” என்று கூறி இருக்கிறார். பொதுத்தேர்தலின் காரணமாக முதல் 15 நாட்களுக்கான ஐபிஎல் அட்டவணையை மட்டுமே பிசிசிஐ தற்போது வெளியிட்டுள்ளது. தேர்தல் அதிகாரிகள் உடன் இது குறித்து பேச்சு வார்த்தை நடத்தி மீதமுள்ள போட்டி அட்டவணைகளையும் விரைவில் வெளியிடுவோம் என்று அறிவித்துள்ளது.