இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி நடைபெறுகிறது. கிரிக்கெட் உலகில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் ஆசஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு அடுத்து, மிகப்பெரிய அளவில் டெஸ்ட் கிரிக்கெட்டை நோக்கி ரசிகர்களை ஈர்க்கக்கூடிய தொடராக இந்தத் தொடர் அமைந்திருக்கிறது.
ஆஸ்திரேலியாவில் இந்திய அணி ஒரு டெஸ்ட் தொடரை வெல்வதற்கு மிகவும் கடினமாக தொடர்ந்து போராடிக் கொண்டிருந்தது. உள்நாட்டில் ஆஸ்திரேலியாவை வெல்ல முடிந்தாலும், அவர்களது நாட்டில் ஒரு முறையாவது டெஸ்ட் தொடரில் அவர்களை வெல்ல வேண்டும் என்பது இந்திய அணியினர் மற்றும் இந்திய ரசிகர்களின் பெரும் கனவாகவே இருந்து வந்தது.
இந்த நிலையில் 2018-19 ஆண்டில் ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் சுற்றுப்பயணத்திற்கு விராட் கோலி தலைமையில் சென்ற இந்திய அணி முதல் முறையாக 2-1 என பார்டர் கவாஸ்கர் கோப்பையை ஆஸ்திரேலிய மண்ணில் வென்று சாதித்தது. இந்த டெஸ்ட் தொடரில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தின் காரணமாக ஸ்மித் மற்றும் வார்னர் ஆஸ்திரேலியா அணியில் இடம் பெறவில்லை.
இதற்கடுத்து 2020- 21ஆம் ஆண்டு இந்திய அணியின் ஆஸ்திரேலியா டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் விராட் கோலி முதல் டெஸ்ட் விளையாடி தோற்று விட்டு நாடு திரும்பி விட்டார். இதற்குப் பிறகு மூன்று டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி ரகானே தலைமையில் இரண்டை வென்று, ஒன்றை டிரா செய்து மீண்டும் ஆஸ்திரேலியா மண்ணில் இரண்டாவது முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இந்தத் தொடரில் இந்திய அணியில் பல நட்சத்திர வீரர்கள் இடம் பெறவில்லை. அறிமுக இளம் வீரர்கள் சேர்ந்து ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது இந்திய கிரிக்கெட்டில் சிறப்பு வாய்ந்த வெற்றிகளில் முதலிடத்தில் இருக்கிறது என்று கூறலாம்.
ஆஸ்திரேலியா மாஸ்டர் பிளான்
மேலும் ஆஸ்திரேலியா கடந்த ஆண்டு பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு இந்தியா வந்து 2-1 எனத் தொடரை இழந்து சென்று இருக்கிறது. ஐந்து முறையாக தொடர்ந்து பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபி இந்திய அணியிடமே இருந்து வருகிறது. எனவே அடுத்து 2024 நவம்பர் முதல் 2025 ஜனவரி வரை ஆஸ்திரேலிய மண்ணில் நடக்க இருக்கும் பார்டர் கவாஸ்கர் டிராபியை கைப்பற்ற கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி முழு தீவிரத்துடன் களமிறங்க இருக்கிறது.
இதற்கு தற்பொழுது போட்டி நடக்கும் ஐந்து மைதானங்களை ஆஸ்திரேலியா கிரிக்கெட் அறிவித்திருக்கிறது. முதல் போட்டியே உலகின் அதிவேக ஆடுகளத்தை கொண்ட பெர்த் மைதானத்தில் நடக்கிறது. இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியாவின் கோட்டை எனப்படும் பிரிஸ்பேன் காபாவில் நடக்கிறது. தொடரின் முதல் முக்கியமான இரண்டு போட்டிகளை தங்களுக்கு சாதகமான மைதானத்தில் நடத்தி, இந்திய அணியை பெரிய நெருக்கடியில் தள்ள ஆஸ்திரேலியா திட்டமிட்டு இருப்பது தெரிய வருகிறது. ஆனால் இந்த மைதானத்தில் ரிஷப் பண்ட் ஆஸ்திரேலியா அணியை கடந்த முறையில் வீழ்த்தி வரலாற்று வெற்றியை பெற்று தந்தார்.
இதையும் படிங்க : என்னால கேப்டன்சி செய்ய முடியாதுனு நினைக்கிறாங்க.. ஜடேஜா மேல திணிக்க முடியுமா? – அஸ்வின் பேட்டி
இதற்கு அடுத்து மூன்றாவது போட்டி அடிலைய்ட் ஓவல் மைதானத்தில் நடக்கிறது. நான்காவது போட்டி மெல்போன் மைதானத்தில் டிசம்பர் 26 ஆம் தேதி துவங்கும் பாக்சிங் டே போட்டியாக நடக்கிறது. ஐந்தாவது போட்டி புத்தாண்டு போட்டியாக 2025 ஆம் ஆண்டு ஜனவரியை ஆரம்பத்தில் சிட்னி மைதானத்தில் நடக்கிறது. ஒட்டுமொத்தமாக கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரிய விருந்து காத்திருக்கிறது.