ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு ரோகித் சர்மா தலைமையில் நேற்று இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
அறிவிக்கப்பட்ட இந்த இந்திய அணியில் காயத்தின் காரணமாக வேகப்பந்துவீச்சு ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இடம் பெறவில்லை. அவர் ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கிடைப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டருக்கான இடத்தில் மிதவேகப்பந்துவீச்சு ஆல் ரவுண்டர் சிஎஸ்கே சிவம் துபே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அதே சமயத்தில் சர்துல் தாக்கூர் மற்றும் தீபக் சகர் ஆகியோர் பரிசீலிக்கப்படவில்லை.
மேலும் அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர்களாக அர்ஸ்தீப் சிங், ஆவேஷ் கான் மற்றும் முகேஷ் குமார் என மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் மட்டுமே இடம்பெற்று இருக்கிறார்கள். சிஎஸ்கே தீபக் சகர் இடம்பெறுவதற்கான எல்லா வாய்ப்புகள் இருந்தும், மற்றொரு சிஎஸ்கே வீரரான சிவம் துபே தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “சுவாரசியமாக மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். தீபக் சகர் தென் ஆப்பிரிக்கா டி20 தொடருக்கு தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அவரது தந்தையின் உடல்நிலை சரியில்லாததால் அவர் செல்லவில்லை. அவரது தந்தையின் உடல்நிலை தற்பொழுது நன்றாக இருக்கிறது. எனவே இப்பொழுது அவர் அணிக்கு கிடைக்க கூடியவராக இருப்பார்.
முகமது சிராஜ் மற்றும் பும்ரா இருவரும் அணியில் இடம்பெறாதது ஏன் என்று புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் தீபக் சகர் அணியில் இல்லாததை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தீபக் சகர் அணிக்கு கிடைக்கக்கூடிய இடத்தில் இருந்திருந்தால் நிச்சயம் அவருடைய பெயர் அணியில் இருந்திருக்க வேண்டும்.
முன்பு இந்திய டி20 அணியில் பிரசித் கிருஷ்ணா கூட இடம் பெற்று இருந்தார். ஆனால் தற்பொழுது அவருடைய இடத்துக்கு ஆவேஸ் கான் வந்திருக்கிறார். இப்பொழுது இவரோடு சேர்த்து அர்ஸ்தீப் சிங் மற்றும் முகேஷ் குமார் என மூன்று பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள்!” என்று கூறியிருக்கிறார்!