இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மகளிர் அண்டர் 19 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி வெறும் 47 பந்துகளில் வெற்றி பெற்றிருக்கிறது.
இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய வீராங்கனை காமிலினி ஆட்டநாயகியாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
இந்தியா பாகிஸ்தான் அண்டர் 19 ஆசிய கோப்பை
கோலாலம்பூரில் மகளிர் அண்டர் 19 ஆசிய கோப்பை நடைபெற்று வருகிறது. மொத்தம் ஐந்து அணிகள் பங்கேற்றுள்ள இந்தத் தொடரின் இரண்டாவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் ஜெயித்த பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதன்படி பேட்டிங் தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீராங்கனை கோமல் கானை தவிர மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார்கள்.
இதில் ஒன்பதாவது வரிசையில் களமிறங்கிய பாத்திமா கான் மட்டுமே 11 ரன்கள் எடுத்த நிலையில் மற்ற அனைவரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டம் இழந்தனர். தொடக்க வீராங்கனை கோமல் கான் 32 பந்துகளில் 24 ரன்கள் குவித்தார். இதனால் பாகிஸ்தான் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் குவித்தது. இந்திய அணியின் பந்துவீச்சில் சோனம் யாதவ் நான்கு ஓவர்களில் 6 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இந்திய வீராங்கனை கமாலினி சிறப்பான ஆட்டம்
அதற்குப் பிறகு வெற்றியிலக்கை நோக்கி இந்திய அணி களம் இறங்கியது. தொடக்க வீராங்கனை த்ரிஷா டக் அவுட் ஆகி வெளியேறினாலும் மற்றொரு தொடக்க வீராங்கனை கமாலினி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 29 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட நிலையில் நான்கு பவுண்டரி மற்றும் 3 சிக்சர் என 44 ரன்கள் குவித்த நிலையில் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். மற்றொரு மூன்றாவது வரிசை வீராங்கனை சானிகா 19 ரன்கள் குவித்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.
இதையும் படிங்க:பவுலிங் கோச் என்ன செய்றாரு.. டிராவிஸ் ஹெட்டுக்கு இந்த பிளான் ஏன் பண்ணல – ஆகாஷ் சோப்ரா விமர்சனம்
இதனால் இந்திய மகளிர் அணி 7.5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 68 ரன்கள் குவித்து ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதாவது இந்திய அணி வெறும் 47 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு இந்த வெற்றி இலக்கை அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட கமாலினி ஆட்ட நாயகி விருது பெற்றார். இதன் மூலமாக குருப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி புள்ளி பட்டியலில் தற்போது முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.






