வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒரு நாள் தொடர்களில் விளையாட உள்ள நிலையில் தற்போது முதலாவது டி20 போட்டி இந்த இரண்டு அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.
இதில் இந்திய கிரிக்கெட் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மகளிர் முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி நவி மும்பையில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச தீர்மானித்த நிலையில் இந்திய மகளிர் அணி பேட்டிங் செய்தது. இதில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி நான்கு இழப்புக்கு 195 ரன்கள் குவித்தது. அதில் அணியின் தொடக்க வீராங்கனையான ஸ்மிருருதி மந்தனா 33 பந்துகளில் ஏழு பவுண்டரி மற்றும் இரண்டு சிக்சர் என 54 ரன்கள் குவித்தார்.
மேலும் மூன்றாவது வரிசை வீராங்கனையான ஜெமிமா ரோட்ரியஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 35 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட நிலையில் ஒன்பது பவுண்டரி மற்றும் இரண்டு சிக்சர் என 208.57 ஸ்டிரைக் ரேட்டில் 73 ரன்கள் குவித்த நிலையில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். இதனால் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 20 ஓவர்களில் 195 ரன்கள் குவித்தது. இதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி வெஸ்ட் இண்டீஸ் அணி களம் இறங்கியது.
இதில் தொடக்க வீராங்கனை குயினா ஜோசப் மற்றும் மிடில் வரிசை வீராங்கனை டேன்ட்ரா டோட்டின் ஆகியோர் மட்டுமே சிறப்பாக விளையாடினார்கள். இதில் குயீனா ஜோசப் 33 பந்துகளை எதிர்கொண்டு ஐந்து பவுண்டரி மற்றும் மூன்று சிக்சர் என 49 ரன்கள் குவிக்க, மிடில் வரிசை வீராங்கனை டோட்டின் 28 பந்துகளை எதிர்கொண்டு நான்கு பவுண்டரி மற்றும் மூன்று சிக்சர் என 52 ரன்கள் குவித்தார். இவர்களை தவிர மற்ற அனைவரும் பந்துகளை வீணடித்தார்கள்.
இதையும் படிங்க:வெறும் 47 பந்து.. பாகிஸ்தான் அணி பரிதாபம்.. இந்திய மகளிர் அணி அபார வெற்றி.. யு19 ஆசிய கோப்பை 2024
இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனால் இந்திய அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறது. இதில் இந்திய அணி தரப்பில் பந்துவீச்சில் டிடாஸ் சது அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார். தீப்தி சர்மா, ராதா யாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.