கேட்சை மிஸ் செய்து மேட்சை மிஸ் செய்த இந்திய அணி ; வீடியோ இணைப்பு!

0
128
Ind vs Pak

தற்போது நடந்து வரும் 15வது ஆசிய கோப்பை தொடரில் சூப்பர் 4 சுற்றின் இரண்டாவது போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் துபாய் சர்வதேச மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் பந்துவீச்சை தேர்வு செய்தார்!

இந்திய அணியில் ஆவேஸ் கான், ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக் ஆகிய மூவர் இடம் பெறவில்லை. இதற்கு பதிலாக ஹர்திக் பாண்டியா, ரவி பிஷ்னோய், தீபக் ஹூடா ஆகியோர் இடம் பெற்றனர். பாகிஸ்தான் அணியில் காயத்தால் ஷானவாஸ் தஹானிக்குப் பதிலாக ஹஸ்னைன் இடம்பெற்றார்.

- Advertisement -

இந்திய அணியின் பேட்டிங்கை துவங்கிய கேஎல்.ராகுல், ரோகித்சர்மா கூட்டணி 4.2 ஓவர்களில் 50 ரன்களை அடித்து அசத்தியது. இதை அடுத்து ரோகித் சர்மா 16 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். உடனே கே.எல்.ராகுலும் 20 பந்தில் 28 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதை அடுத்து வந்த இந்திய வீரர்களில் விராட் கோலியை தவிர ஒருவரும் ரன் அடிக்கவில்லை. அதிகபட்சமாக தீபக் ஹூடாதான் 16 ரன்கள் அடித்தார். கடைசி ஓவரின் 4-வது பந்து வரை களத்தில் நின்ற விராட் கோலி 44 பந்தில் 60 ரன்கள் எடுத்து ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 181 ரன்கள் எடுத்தது.

பெரிய இலக்கை நோக்கி களம் கண்ட பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆட்டத்தின் 4-வது ஓவரில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஆனால் இன்னொரு துவக்க ஆட்டக்காரரான முஹம்மது ரிஸ்வான் 51 பந்துகளில் 71 ரன்கள் குவித்து இந்த ஆசிய கோப்பை தொடரில் அதிக ரன் குவித்த வீரர் ஆனார். இவரோடு 3-வது விக்கெட்டுக்கு அனுப்பப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் முகமது நவாஸ் 20 பந்துகளில் 42 ரன்கள் குவித்து ஆட்டத்தின் மொத்த தலையெழுத்தையும் மாற்றி விட்டார்.

- Advertisement -

இதையடுத்து கடைசி மூன்று ஓவர்களுக்கு 34 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில் ஆட்டத்தின் 18-வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் வீசினார், அந்த ஓவரை ஆடிய பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலி பந்தை தூக்கி அடிக்க, பந்து உள்வட்டத்தில் எளிதாய் அர்ஸ்தீப் சிங் கைகளில் விழுந்தது. அந்த கேட்சை அவர் தவற விட்டு விட்டார். பின்பு ஆசிப் அலி புவனேஸ்வர் குமாரின் அடுத்த ஓவரில் ஒரு பவுண்டரி சிக்சர் அடித்து ஆட்டத்தை எளிதாக்கி விட்டார். இதற்கான காணொளி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் கடைசி ஓவரில் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட, அந்த ஓவரை வீசிய அஸ்ர்தீப் சிங் 4 பந்துகளுக்கு 5 ரன்கள் மட்டும் கொடுத்து ஆசிப் அலியின் விக்கெட்டை வீழ்த்தினார். இதனால் கடைசி இரண்டு பந்துகளுக்கு இரண்டு ரன்கள் என்ற சூழ்நிலை உருவாகி ஆட்டம் பரபரப்பானது. ஆனால் ஆட்டத்தின் கடைசி ஓவரின் 5-வது பந்தை விளையாடிய இப்திகார் பந்தை நேராக அடித்து 2 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணியை வெற்றி பெற வைத்தார். இந்திய அணி அடுத்து இலங்கை ஆப்கானிஸ்தான் இரண்டு அணிகளையும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.