டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு இந்தியாவில் அவர்களது சொந்த மாநிலங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், வேகப்பந்துவீச்சாளரான அர்ஸ்தீப் சிங்குக்கும் அவரது சொந்த மாநிலமான பஞ்சாபில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சொந்த ஊருக்கு திரும்பிய பிறகு அர்ஸ்தீப் சிங் உலகக்கோப்பை அனுபவம் குறித்து சில முக்கிய தகவல்களை கூறியிருக்கிறார்.
கடந்த 2023ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பையில் கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக முகமது சமி டி20 உலக கோப்பையில் பங்கு பெற முடியவில்லை. இதனால் அவரது இடத்தை நிரப்ப முக்கிய பந்துவீச்சாளர் தேவைப்பட்டார். ஐபிஎல்லில் பஞ்சாப் அணிக்காக சிறப்பாக செயல்பட்டு கவனத்தை ஈர்த்த அர்ஸ்தீப் சிங் ஏற்கனவே 2022 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாடிய அனுபவத்தால் இவர் சரியான மாற்றுவீராக இருப்பார் என்று பிசிசிஐ நம்பி இவருக்கு வாய்ப்பு கொடுத்தது.
அதைக் கச்சிதமாக பயன்படுத்திக் கொண்ட அர்ஷிதீப் சிங் இந்த உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு 17 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதில் முக்கியமாக கூற வேண்டுமெனில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு இக்கட்டான நெருக்கடியில் அற்புதமாக வீசி இந்திய அணி உலக கோப்பையை வெல்ல இவரும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தார்.
இந்த சூழ்நிலையில் அர்ஸ்தீப் சிங் ரோஹித் சர்மா மற்றும் பும்ரா ஆகியோருடன் இணைந்து செயல்பட்டது சிறப்பான அனுபவம் என்றும் அவர்கள் இருவரும் லெஜெண்ட் வீரர்கள் எனவும் கூறி இருக்கிறார். இது குறித்து அவர் விரிவாக கூறும்பொழுது “ரோஹித் பாய், ஜஸ்சி பாய் இருவருமே விளையாட்டின் ஜாம்பவான்கள். அவர்கள் இருவரும் நீண்ட காலமாக சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். எனக்கு சிறப்பாக செயல்பட எப்போதெல்லாம் ஒரு புள்ளி கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அவர்களிடம் விவாதிப்பேன்.
நான் கூறுவதையும் தவறாமல் கணக்கில் எடுத்துக் கொள்ளும் அவர்கள் அதற்கேற்றவாறு திட்டங்களை அமைப்பார்கள். ஜஸ்சி பாய் ஒரு வித்தியாசமான ஆக்சனை கொண்ட பந்துவீச்சாளர். அவருக்கு நன்றாக செயல்படும் சில விஷயங்கள் மற்றவர்களுக்கு செயல்படாமல் போகலாம். ஆனால் அவர் பவுன்ஸ் மற்றும் ரிவர்ஸ் ஸ்விங் பந்துகளை எவ்வாறு சரி செய்வது என்று எனக்கு வழிகாட்டுகிறார். மேலும் குறிப்பாக ஆரம்பத்திலேயே ஸ்விங் பந்து வீச்சுக்கு செல்ல வேண்டாம் என்று கூறுவார்.
இதையும் படிங்க:50,000 பந்து.. இனி யாரும் செய்யவே முடியாத சாதனை.. ஆண்டர்சன் அதிசய ரெக்கார்ட்.. கடைசி டெஸ்டில் கலக்கல்
ஆனால் அந்த ஆடுகளங்களில் பந்து அதிகமாக ஸ்விங் ஆகாது. இதனால் சரியான நேரத்தில் பந்தை வீசுவது முக்கியம். பும்ரா போட்டி முழுவதும் எனக்கு ஏதாவது அறிவுரைகளை வழங்கிக் கொண்டே இருப்பார். எங்கள் விவாதங்கள் அவ்வப்போது ஒத்துப் போகாது. நான் இளந்தளிர் என்பதால் சில நேரங்களில் அவருடன் என்னால் உடன்பட முடியாது” என்று சிரித்துக் கொண்டே கூறுகிறார்.