“அந்த விஷயத்தில் தற்போது இந்திய அணி வலுவாக இல்லை, அதன் காரணமாகவே டர்னிங் ஆடுகளங்களை தயார் செய்கிறார்கள்” – புதிய சர்ச்சையை கிளப்பிய சுனில் கவாஸ்கர்!

0
100

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் ஆஸ்திரேலியா அணி நான்கு போட்டிகளைக் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர்களில் ஆடி வருகிறது. இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா 1-2 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியிடம் தோல்வி அடைந்த ஆஸ்திரேலிய அணி இந்தூரில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்தத் தொடரின் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் அகமதாபாத்தில் நடைபெற இருக்கிறது.

இந்த டெஸ்ட் போட்டி தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே ஆடுகளங்களின் தன்மை பற்றிய சர்ச்சை தொடங்கிவிட்டது. இந்தியா தங்களது பந்து வீச்சிக்கு சாதகமாக ரேங்க் டர்ணர்களை அமைப்பதாக ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை பகிர்ந்து வந்தனர். இந்தப் போட்டி தொடர்களில் மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்ற இந்தூர் மைதானத்தின் ஆடுகளத்தை ஐசிசி தரமற்றதாக மதிப்பீடு செய்து மூன்று டிமெரிட் புள்ளிகளை வழங்கியது.

- Advertisement -

இந்நிலையில் நான்காவது போட்டி நடைபெற இருக்கும் அகமதாபாத்தின் ஆடுகளம் எவ்வாறு இருக்கும் என்று எதிர்பார்ப்பு தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்களிடையே ஏற்பட்டிருக்கிறது. 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற டெஸ்ட் போட்டி தான் அகமதாபாத்தில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியாகும். அதன் பிறகு இரண்டு வருடங்கள் கழித்து தற்போது தான் அங்கு டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கிறது. அந்தப் போட்டியின் ஆடுகளமும் சுழற் பந்துவீச்சிக்கு சாதகமாக இருந்ததாக இங்கிலாந்து அணியின் விமர்சகர்கள் குற்றஞ்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் பிரபலமான கிரிக்கெட் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் இந்திய அணி ஏன் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களை டெஸ்ட் போட்டிகளுக்கு தயார் செய்கிறது என இந்தியா டுடே பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார். இது பற்றி தனது கருத்தை பகிர்ந்து உள்ள அவர் “இந்திய ஆடுகளங்களில் 20 விக்கெட்டுகளை வீழ்த்துவது என்பது சுலபமான காரியமில்லை. மேலும் முக்கியமான வேக பந்துவீச்சாளர் அணியில் இடம்பெறாத சூழ்நிலையில் இந்திய அணி சுழற்பந்துவீச்சையே பெரிதும் நம்பி இருக்கிறது. அதன் காரணமாகவே சுழற்பந்துவீச்சிக்கு ஒத்துழைக்கும் ஆடுகளங்களை தயார் செய்கிறார்கள்”என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது பற்றி தொடர்ந்து பேசி இருக்கும் கவாஸ்கர்” இந்திய அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளரான பும்ரா அணியில் இடம்பெறாத நிலையில் முகமது சமி மட்டுமே அனுபவம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளராக இருக்கிறார். முகமது சிராஜ் தற்போது தான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடி வருகிறார். இதனால் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு சற்று பலகினமானதாக இருக்கிறது. இதன் காரணமாக அவர்கள் பெரும்பாலும் சுழற்பந்துவீச்சை நம்பியே இருக்க வேண்டி உள்ளது. இதன் அடிப்படையில் தான் அவர்கள் டெஸ்ட் போட்டிகளின் போது சுழற் பந்துவீச்சிக்கு சாதகமான ஆடுகளங்களை தயார் செய்கிறார்கள் என நான் நினைக்கிறேன்” என கூறி முடித்தார்.

- Advertisement -

இந்திய அணி நான்காவது டெஸ்ட் போட்டியை வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்று விடும். இல்லையென்றால் இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளின் வெற்றி தோல்விகளை சார்ந்து இருக்க வேண்டிய சூழ்நிலை இந்திய அணிக்கு உருவாக்கலாம். இதன் காரணமாக நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு முயற்சி செய்யும் இந்திய அணி.