இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் வெற்றி பெற்று 4-1 என்ற கணக்கில் தொடரை வென்று சாதனை படைத்தது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் வெற்றி பெற்ற விதம் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்தியா இங்கிலாந்து டி20
இந்திய அணி இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்து அபிஷேக் ஷர்மாவின் அதிரடியான ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் குவித்தது. இதில் இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா அபாரமாக விளையாடி 54 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 13 சிக்ஸர்கள் என 135 ரன்கள் குவித்தார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் சதம் அடித்து அசத்திய அபிஷேக் ஷர்மா அதற்குப் பிறகு இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் மூலம் சதம் அடித்து தனது திறமையை நிரூபித்தார்.
அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய இங்கிலாந்து அணி இந்திய பந்து வீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சால் 10.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 97 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் வெற்றி பெற்றது குறித்து சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.
தூபே நிச்சயம் செஞ்சிருப்பார்
இதுகுறித்து கம்பீர் கூறும் போது “இங்கிலாந்து அணி மிகவும் ஒரு உயர்தரமான அணி. நாங்கள் இதில் ஒரு போட்டியில் தோற்று விடுவோமோ என்று பயப்பட விரும்பவில்லை. நாங்கள் 250 முதல் 260 ரன்கள் குவிக்க விரும்புகிறோம். ஆனால் ஒரு சில சமயங்களில் 120 ரன்களில் அவுட் ஆக நேரிடும். இருப்பினும் நாங்கள் சரியான பாதையில் பயணிக்கிறோம். நாங்கள் இதை முன்னோக்கி செய்ய விரும்புகிறோம், குறிப்பாக பயமின்றி கிரிக்கெட் விளையாட வேண்டும். அபிஷேக் ஷர்மா போன்ற வீரர்களை நாங்கள் ஆதரிப்பது மிகவும் முக்கியம். இது போன்ற வீரர்கள் அச்சமின்றி கிரிக்கெட் விளையாடும் சித்தாந்தத்தை நம்புகிறார்கள்.
இதையும் படிங்க:எவ்ளோ கிரிக்கெட் பாத்திருக்கேன் இதுதான் பெஸ்ட்.. தொடரை இழந்தாலும் ஆறுதலா இருக்கு – பட்லர் பேட்டி
140-150 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசும் பவுலர்களுக்கு எதிராக இது போன்ற சதத்தை நான் பார்த்ததில்லை. இவர்கள் ஒருவருக்கொருவர் நிறைய கிரிக்கெட் விளையாடியுள்ளனர். 140-150 கோடி மக்களை பிரதிநிதிப்படுத்துவது என்றால் என்ன என்பதை எங்கள் வீரர்கள் அறிவார்கள். எனக்கு பிஷ்னோய் மற்றும் வருண் இருவரும் இணைந்து பந்து வீசுவது முக்கியமானது. பேட்டிங்கில் இன்னும் கடினமாக இருக்க நாங்கள் முயற்சிக்கிறோம். சிவம் துபே சிறப்பாக பந்து வீசினார். அவர் இந்த போட்டியில் நான்கு ஓவர்கள் வீசி இருப்பார் என்று கிண்டலாக கூறி இருக்கிறார். முந்தைய போட்டியில் காயம் அடைந்து சிவம் துபே வெளியேறிய நிலையில் அவருக்கு பதிலாக வந்த ஹர்ஷித் ரானா பந்து வீசி விக்கெட்டுகள் வீழ்த்தியது சர்ச்சையானது. இதனால்தான் கம்பீர் சிவம் துபே இன்று நான்கு ஓவர்கள் வீசி இருப்பார் என்று கிண்டலாக பதிலளித்திருக்கிறார்.






