இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக மிகப்பெரிய தோல்வியை சந்தித்த நிலையில் பயிற்சியாளர் குழு மற்றும் இந்திய அணி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட புதிய விதிகள் குறித்து தலைமை பயிற்சியாளர் அஜித் அகர்கர் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் மோசமான தோல்விகளை எதிர்கொண்ட நிலையில் இது பல முன்னாள் வீரர்கள் இடையே விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதனால் இந்திய கிரிக்கெட் வாரியம் அணி வீரர்கள் குடும்பங்களோடு தங்குவதை குறைப்பது மற்றும் தனிப்பட்ட படப்பிடிப்புகளில் பங்கேற்பது, தனியாக மேலாளர் மற்றும் சமையல்காரர் என வைத்துக்கொள்வது உள்ளிட்டவைகளுக்கு தடை விதித்தது. மேலும் இந்திய அணி வீரர்கள் போட்டி முடியும் வரை ஒன்றாக இருக்க வேண்டும் எனவும் ஒரே பேருந்தில் பயணம் செய்ய வேண்டும் எனவும் சில கட்டுப்பாடுகளை விதித்தது.
இது இந்திய அணியின் நலனுக்காகவே பார்க்கப்பட்டாலும், வெளியில் இருந்து பார்க்கும்போது இது வீரர்களுக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுவது போன்று தோன்றுகிறது என கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்திய வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்பதை தவிர மற்ற விதிமுறைகள் சற்று விமர்சனத்தை ஏற்படுத்துவதாக இருக்கும் நிலையில் இதற்கு தலைமை பயிற்சியாளர் அஜித் அகர்கர் கருத்து விளக்கத்தை அளித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “ஒவ்வொரு அணிக்கும் சில விதிகள் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். கடந்த சில மாதங்களாகவே ஒரு அணியாக நாங்கள் முன்னேறவும், ஒரு அணியாக நாங்கள் நெருக்கமாக இருக்கவும் பல்வேறு விஷயங்களை விவாதித்துள்ளோம். கடந்த சில மாதங்களாக இந்திய அணியில் சில மாற்றங்கள் மற்றும் அதிக பிணைப்பு ஆகியவற்றின் அவசியத்தை கண்டோம். இது ஒரு பள்ளிக்கூடமோ அல்லது வீரர்களுக்கு வழங்கப்படுகிற தண்டனையோ அல்ல.
இதையும் படிங்க:இந்திய அணி இல்லை.. சாம்பியன்ஸ் ட்ராபியில் சவாலான அணி இதுதான் – சுனில் கவாஸ்கர் கணிப்பு
உங்களிடம் சில விதிகள் இருக்கிறது, அதை தேசிய அணிக்காக விளையாடும் போது அதை பின்பற்றுகிறீர்கள் அவ்வளவுதான். இந்திய அணியில் சிலர் சீனியர் வீரர்கள். சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் சூப்பர் ஸ்டார்கள். அவர்களுக்கு தங்களை எப்படி கையாள்வது என்று நன்றாகத் தெரியும். ஆனால் நாளின் இறுதியில் உங்கள் நாட்டை பிரதிநிதிப்படுத்துகிறீர்கள். எனவே அதற்காக விளையாடும் போது சில விஷயங்களை பின்பற்ற வேண்டும். இவை அனைத்தும் முன்பே இருந்தவைதான். தற்போது இதைப்பற்றி பேசும்போது வெளியே தெரிகிறது. இது முன்னரே இருக்கிற விதிமுறைகள் தான்” என்று கூறியிருக்கிறார்.