இந்திய கிரிக்கெட் அணி வங்கதேச அணிக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தற்போது விளையாடி வரும் நிலையில் இதற்கு அடுத்து இதே அணியோடு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க உள்ளது.
இந்திய சர்வதேச டி20 அணியில் முதன்முதலாக வாய்ப்பு பெற்று இருக்கும் மயங்க் யாதவ் தனது பயிற்சியாளர்கள் குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் தனது அதிவேக பந்துவீச்சுக்காக அனைவராலும் கவனம் ஈர்க்கப்பட்டவர் லக்னோ அணியில் விளையாடிய 22 வயதே ஆன மயங்க் யாதவ். ஒரு சில போட்டிகளில் விளையாடினாலும் தனது அபாரமான பந்துவீச்சால் லக்னோ அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார். அதற்குப் பிறகு ஏற்பட்ட காயத்தால் அந்த சீசன் முழுவதும் அவர் விளையாடவில்லை.
அதற்குப் பிறகு தனது தீவிர கடின உழைப்பின் காரணமாக காயத்திலிருந்து மீண்டு வந்து தற்போது வங்கதேச அணிக்கு எதிராக டி20 தொடரில் முதன்முறையாக இந்திய அணிக்காக களமிறங்கி விளையாட இருக்கிறார். இந்த சூழ்நிலையில் அவரது கிளப் பயிற்சியாளர்களாக திகழ்ந்த தேவேந்தர் சர்மா மற்றும் மறைந்த தாரக் சின்ஹா ஆகியோர் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “அப்போதெல்லாம் எனக்கு பந்து வீச்சு காலணிகள் கூட வாங்க பணம் இருக்காது. தாரக் சாரும், தேவேந்தர் சாரும் ஒரு முறை அதை கவனித்தார்கள். பின்னர் எனது விருப்பப்படி ஷூக்களை வாங்க பணமும் கொடுத்தார்கள். நான் என்னை எப்போதுமே ஒரு ஸ்பெஷல் பவுலர் என்று நினைத்துக் கொள்வதில்லை.
ஒருமுறை ஜெய்பூரில் கோவிட் லாக் டவுனுக்கு முன்பாக நான் வீரர்கள் குழுவில் மறைந்திருந்தேன். அப்போது மைதானத்திற்கு வந்த தாரக் சார் அங்கிருந்து அனைவரிடமும் இங்கே ஒரு சிறப்பான பந்துவீச்சாளர் இருக்கிறார். அவர் எந்த நேரத்திலும் டெல்லி அணிக்காக ரஞ்சித் தொடரில் விளையாட காத்திருக்கிறார். மேலும் இன்னும் நான்கு வருடங்களில் இந்திய அணிக்காக விளையாடப் போகிறார்.
இதையும் படிங்க:அஸ்வின் விக்கெட் எடுக்க.. விராட் கோலி கொடுத்த தெறி ஐடியா.. அடுத்த பந்தில் மேஜிக் – களத்தில் நடந்த சுவாரசியம்
அதுதான் மயாங்க் யாதவ். அவர் கூறிய அந்த வார்த்தைகளில் இருந்து எனது நம்பிக்கை மிக உயர்ந்த நிலையை அடைந்தது” என்று கூறி இருக்கிறார். தற்போது காயத்திலிருந்து மீண்டு வந்திருக்கும் நிலையில் ஐபிஎல் தொடரில் செயல்பட்டதை போன்று இந்திய அணிக்காகவும் சிறப்பாக செயல்பட்டு எதிர்கால நட்சத்திரமாக ஜொலிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.