இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மோசமான முறையில் விளையாடி தொடரை இழந்தது.
இந்த தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் கில் காயம் அடைந்த காரணத்தினால் ரிஷப் பண்ட் கேப்டனாக செயல்பட்டார். களத்தில் கேப்டனாகவும் பேட்ஸ்மேன் ஆகவும் இரண்டிலுமே அவர் மோசமாக செயல்பட்டதால் இந்திய அணி தோல்வி அடைவதற்கு முக்கிய காரணமாக இருந்தது.
அஸ்வின் கடும் விமர்சனம்
இந்திய அணி ஒட்டுமொத்தமாக சரியாக செயல்படாத போதிலும், கேப்டனாக விளையாடிய ரிஷப் பண்ட் தன்னுடைய பொறுப்பை கொஞ்சம் கூட உணராமல் விளையாடினார் என்றும், அவர் தன்னுடைய திறமையை உணர்ந்து கொள்ளாமல் தொடர்ந்து வீணடிக்கிறார் என ரவிச்சந்திரன் அஸ்வின் வருத்தம் தெரிவித்து இருந்தார்.
மேலும் அணியின் பெரிய வீரர்களாக இருந்தாலும் பொறுப்பில்லாமல் முட்டாள்தனமாக விளையாடினால் அவர்களை அணியை விட்டு நீக்க தயங்க கூடாது என சில முன்னாள் வீரர்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் ரிஷப் பண்ட் விளையாடிய விதத்திற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறார்.
எல்லோரும் மன்னித்து விடுங்கள்
இதுகுறித்து ரிஷப் பண்ட் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் “கடந்த இரண்டு வாரங்களாக நாங்கள் போதுமான கிரிக்கெட்டை விளையாடவில்லை என்று சொல்வதில் வெட்கப்பட போவதில்லை. ஒரு அணியாகவும் தனிநபர்களாகவும் நாங்கள் எப்பொழுதும் சிறப்பாக விளையாடவே விரும்புகிறோம். பில்லியன் கணக்கான இந்தியர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி அவர்களின் முகத்தில் புன்னகையை கொண்டு வர தவறிவிட்டோம்”
இதையும் படிங்க : ஸ்டேட் டீமுக்கு கூட கம்பீர் கோச்சா இருந்ததில்லை.. ஆனால் விராட் ரோகித்துக்கு ஆர்டர் போட்டார் – சடகோபன் ரமேஷ் விளாசல்
“இதற்காக எங்களை அனைவரும் மன்னித்துக் கொள்ளுங்கள். ஆனால் விளையாட்டு உங்களை மாற்றிக் கொள்ளவும் வளரவும் கற்றுக் கொடுக்கிறது. இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவது எங்கள் ஒவ்வொருவருக்கும் மிகப் பெருமையான விஷயம். இந்த அணியின் திறன் என்ன என்பதை நாங்கள் அறிவோம். நாங்கள் மீண்டும் திரும்பி வருவதற்கு கடுமையாக உழைப்போம். இழந்ததை மீட்டமைப்போம்” என்று கூறி இருக்கிறார்.






