தற்போது சூரியகுமார் தலைமையில் இளம் இந்திய டி20 அணி அமைந்திருக்கிறது. புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் வந்திருக்கிறார். இந்த நிலையில் நேற்று இலங்கை அணிக்கு எதிராக டி20 தொடரை கைப்பற்றிய இந்திய அணியில் இடம்பெற்றிருந்த வேகப்பந்துவீச்சாளர் அர்ஸ்தீப் சிங் தனது அணியின் சக வீரர் பற்றி நகைச்சுவையாகப் பேசியிருக்கிறார்.
நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் 15 ஓவர்கள் வரையில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து குறைந்தது 180 ரன்கள் எடுக்கக்கூடிய இடத்தில் இலங்கை இருந்தது. இந்த இடத்தில் கடைசி கட்டத்தில் கேப்டன் சூரியகுமார் யாதவ் சுழல் பந்துவீச்சாளர் ரவி பிஸ்னாயை பயன்படுத்த, அவர் முக்கிய இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்ற இலங்கை 161 ரன்கள் மட்டுமே எடுத்தது.
நேற்றைய போட்டியில் ரவி பிஸ்னாய் நான்கு ஓவர்கள் பந்துவீசி 26 ரன்கள் மட்டும் விட்டு தந்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும் அவரே ஆட்டநாயகன் ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் போட்டியில் ஒரு விக்கெட் கைப்பற்றிய போதும் ரன்கள் விட்டுத் தந்திருந்தார். மேலும் பந்து முகத்தில் பட்டு அவருக்கு காயமும் ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்றைய போட்டி முடிவுக்கு பின் ரவி பிஸ்னாய் பற்றி பேசிய அர்ஸ்தீப் சிங் கூறும்பொழுது “ரவி பிஸ்னாய் மிகவும் பெரிய இதயம் கொண்டவர். அவர் மிகவும் துணிச்சலுடன் வந்து பேசுகிறார். அவர் மிகவும் கடினமாக உழைக்கிறார். இந்த இரண்டுக்குமான வெகுமதியைத்தான் அவர் பெறுகிறார்.முதல் ஆட்டத்தில் ரண்களுக்கு சென்ற பொழுதும் ஒரு விக்கெட் எடுத்து மீண்டும் வலுவாக திரும்பி வந்தார். களத்திற்கு உள்ளே வெளியே நாங்கள் இருவரும் நல்ல நட்பை பேணி வருகிறோம்.
ரவியைப் பற்றி மக்களுக்கு தெரியாத ஒரு விஷயம் என்னவென்றால், அவர் எப்பொழுதும் எல்லா வேலைகளிலும் அவசர அவசரமாக இருப்பார். அவர் மதிய உணவை கூட மிக வேகமாக சாப்பிட்டுவிட்டு ஹோட்டலுக்கு திரும்புவதில் அவசரம் காட்டுவார். எதையும் அவசரமாகச் செய்யும் இயல்புடைய அவர் இன்று அதேபோல் அவசரமாக மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்” என்று நகைச்சுவையாகக் கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க : எல்லா ஆட்டத்திலும் சாம்சன் மட்டுமே ரன் அடிக்கணுமா?.. நியாயமா அவருக்கு இதை செய்யுங்க – யோஹன்னன் கருத்து
இதுகுறித்து ரவி பிஸ்னாய் கூறும்பொழுது “இப்படி அவசரமாக இருப்பது என் சிறு வயதில் இருந்து இருக்கக்கூடிய பழக்கம். இதனால்தான் நான் பந்து வீசும் போது கூட வேகமாக வீசுகிறேன். இப்படி அவசரமாக செயல்படுவதால் எனக்கு சீக்கிரத்தில் பசி எடுக்கிறது. இதன் காரணமாக அடிக்கடி சாப்பிடுகிறேன். இந்த பழக்கத்தை மாற்றிக் கொள்ள முயற்சி செய்கிறேன் ஆனால் அதில் என்னால் இன்னும் வெற்றி பெற முடியவில்லை” என்று கூறி இருக்கிறார்.