இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான மிஸ்டர் ஐசிசி என்று அழைக்கப்படும் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் சர்வதேச போட்டி மற்றும் உள்நாட்டு போட்டித் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்.
ஷிகர் தவான் முதன்முதலாக 2010ஆம் ஆண்டு ஒருநாள் போட்டி தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அறிமுகம் ஆனார். தொடக்கம் சரியாக இல்லாவிட்டாலும் அதற்குப் பிறகு 2013ஆம் ஆண்டு மீண்டும் இந்திய அணிக்கு திரும்பி தனது இடத்தை உறுதி செய்தார். அதற்குப் பிறகு துவக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவோடு சேர்ந்து பல எண்ணற்ற சாதனைகளைப் படைத்து இந்திய அணியின் அசைக்க முடியாத நட்சத்திர கிரிக்கெட் வீரராக விளங்கினார்.
2013ஆம் ஆண்டு அறிமுகமான டெஸ்ட் தொடரில் 85 பந்துகளில் சதம் விளாசி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்தார். மேலும் 2013 மற்றும் 2017 ஆம் ஆண்டில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன் குவித்ததற்கான தங்க மட்டை விருதையும் பெற்றார். ஐசிசி ஒரு நாள் தொடரில் சிறப்பாக செயல்பட்டதற்காக அவருக்கு ‘மிஸ்டர் ஐசிசி’ என்ற புனை பெயரும் வழங்கப்பட்டது.
மொத்தமாக ஒரு நாள், டெஸ்ட், டி20 என சர்வதேச கிரிக்கெட்டில் 269 போட்டிகளில் விளையாடி 10867 ரன்கள் குவித்து சாதனை படைத்திருக்கிறார். இவை அனைத்திற்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக ஷிகர் தவான் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் அவர் கூறும் போது “இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பதே எனது ஒரே லட்சியமாக வைத்திருந்தேன். அந்த லட்சியத்தையும் நான் அடைந்தேன். முதலில் நிறைய பேருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும் எனது குழந்தை பருவ பயிற்சியாளரான தாரக் சின்ஹா மற்றும் மதன் ஷர்மா ஆகியோரின் கீழ் நான் நிறைய கிரிக்கெட் கற்றுக் கொண்டேன். பல ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி இன்னொரு குடும்பமும் கிடைத்துள்ளது. புகழ், அன்பு, ஆதரவு என அனைத்தும் கிடைத்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் இருந்து நான் ஓய்வு பெறுகிறேன்.
இதையும் படிங்க:108 பந்து 0 விக்கெட்.. ஏமாற்றிய பாக் நட்சத்திரம்.. 3 மணி நேரத்துல இந்த மாதிரி நடக்கும்னு நாங்க நினைக்கவே இல்லை- அசார் மஹ்மூத் பேட்டி
நான் தற்போது கிரிக்கெட்டில் இருந்து விடைபெறும்போது நாட்டிற்காக விளையாடிய திருப்தி எனக்கு கிடைத்துள்ளது. பிசிசிஐ மற்றும் டிடிசிஏ ஆகியவற்றுக்கு நான் நன்றி உள்ளவனாக இருக்கிறேன். எனக்கு இந்த வாய்ப்பை வழங்கியதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். இனி நாட்டிற்காக விளையாட மாட்டேன் என்று நீங்கள் வருத்தப்பட வேண்டாம். இதுவரை விளையாடியதே பெரிய சாதனையாகும் எனக்கு ஆதரவளித்த என் ரசிகர்களுக்கு மிகப்பெரிய நன்றி” என்று கூறி இருக்கிறார். சிகார் தவான் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கட் தொடர்களில் மட்டுமே விளையாட மாட்டேன் என்று அறிவித்திருக்கிறார் இதனால் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் நிச்சயம் விளையாடுவார் என்றே தெரிகிறது.