நடந்து முடிந்த 2024 17வது ஐபிஎல் சீசனில் இந்திய கிரிக்கெட்டின் பந்துவீச்சு துறைக்கு லக்னோ அணியின் வலதுகை வேகப்பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் பெரிய நம்பிக்கை கொடுப்பவராக இருந்தார். அவருடைய அதிவேக பந்துவீச்சு பேட்ஸ்மேன்களை அசரடித்தது. அதே சமயத்தில் காயத்தால் தொடரை விட்டு பாதியில் வெளியேறியவர் எப்போது மீண்டும் திரும்பி வருவார் என்பது குறித்து அவரே கூறியிருக்கிறார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மயங்க் யாதவ் அதிவேகமாக பந்து வீசினாலும் துல்லியத்தை தவறவிடாமல் பந்து வீசி எல்லோரது கவனத்தையும் கவர்ந்தார். மேலும் பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிக்கு எதிராக தனி ஒரு வீரராக லக்னோ அணியை வெற்றி பெற வைத்தார். இவ்வளவு வேகத்தில் இவ்வளவு துல்லியும் சாத்தியமில்லை என்பதால் அவர் ஒரு அபூர்வ வீரராகப் பார்க்கப்பட்டார்.
துரதிஷ்டவசமாக அவர் பந்து வீசும் கோணத்தில் அவருக்கு உடலின் ஒரு பக்கத்தில் காயம் ஏற்பட்டது. இதனால் ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறி, தற்போது இந்திய தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை மற்றும் மறுவாழ்வில் இருந்து வருகிறார். மேலும் அவர் தீவிர பயிற்சியையும் தொடங்கி இருப்பதாக கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக மயங்க் பேசும் போது “எனது மீட்பு திட்டம் சிறப்பாக சென்றது. இப்போது நான் மிகவும் நன்றாக உணர்கிறேன். நான் நன்றாக உடல் தகுதியுடன் இருக்கிறேன். அதேசமயத்தில் நான் இங்கு இன்னும் கொஞ்சம் நேரம் செலவிட வேண்டும். நல்ல விஷயம் என்னவென்றால் நான் முழுமையான முறையில் பந்து வீசி பயிற்சி செய்கிறேன். கடந்தசில நாட்களில் என்னுடைய தீவிரம் மற்றும் பந்துவீச்சு குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறியிருக்கிறார்.
மயங்க் யாதவ் குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறும் பொழுது ” அவர் எல்லா வடிவத்திலும் விளையாடுவதற்கு அவருக்கு நேரம் கொடுக்க வேண்டும். ஒரு காயத்திற்கு பிறகு இருப்பதால் அவரை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். தேவைப்பட்டால் அடுத்த ஆண்டு வரை கூட அவரை தயார்படுத்துவது தொடரலாம்.அவர் வரவிருக்கும் துலீப் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டால், அடுத்து பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக இந்திய அணிக்கு கூட அவர் விளையாடலாம்” என்று கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க : ஐபிஎல் 2025.. டிராவிட்டை தட்டி தூக்கும் பெரிய அணி.. ஆச்சரியப்படுத்தும் சம்பளம்.. வெளியான தகவல்
மேலும் பொக்கிஷம் போன்ற பும்ராவுக்கு அதிக ஓய்வு கொடுப்பது இந்திய கிரிக்கெட்டுக்கு மிகவும் நல்லது. எனவே இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் மயங்க் யாதவ் உடல் தகுதியுடன் விளையாட ஆரம்பித்தால், பும்ராவுக்கு பெரிய அளவில் ஓய்வு கொடுக்க முடியும். இதனால் அவர் நீண்ட காலம் இந்திய அணிக்கு விளையாடுவதோடு, கிடைக்கும் வாய்ப்புகளில் மிகச் சிறப்பான தாக்கத்தையும் பலத்தோடு உருவாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மயங்க் யாதவ் வருகை இந்திய கிரிக்கெட்டுக்கும் பும்ராவுக்கும் மகிழ்ச்சியான செய்தி!






