இந்திய அணி பங்களாதேஷ் அணிக்கு எதிராக அதிரடியான முறையில் பேட்டிங் செய்ததை இங்கிலாந்து அணியுடன் ஒப்பிட்டு பேசிய மைக்கேல் வாகனுக்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இன்று இந்திய அணி பங்களாதேஷ் அணிக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அதிவேகமாக ரன்கள் அடிப்பதில் பல சாதனைகளை உடைத்து புதிய சாதனைகளை படைத்திருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டை இந்த அளவிற்கு யாரும் அதிரடியாக அணுகியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
34.4 ஓவர் மேஜிக்
பங்களாதேஷ் முதல் இன்னிங்ஸ் 234 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிசை விளையாடிய இந்திய அணி வெறும் 34.4 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. ஒரு ஓவருக்கு 8.22 ரன் ரேட்டில் இந்திய அணி அதிரடியாக விளையாடியது. இந்த ரன் ரேட்டில் 200 ரன்களுக்கு மேல் அடித்த ஒரே அணியாக இந்திய அணி உலக சாதனை படைத்தது.
மேலும் இன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 50, 100, 150, 200 என ரன்கள் அடித்து பல உலக சாதனைகளை இந்திய அணி உடைத்திருக்கிறது. மேலும் இந்திய அணி வெறும் 34.4 ஓவரில் முதல் இன்னிங்ஸ் டிக்ளர் செய்து, இந்த விதத்திலும் உலக சாதனையை படைத்திருக்கிறது. மேலும் ரோகித் சர்மா தான் சந்தித்த ஆட்டத்தின் முதல் இரண்டு பந்துகளையும் சிக்சர் அடித்ததும் உலகச் சாதனையாக அமைந்திருக்கிறது.
மைக்கேல் வாகனுக்கு விமர்சனம்
இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் இந்திய அணி இங்கிலாந்து அணியின் பாஸ்பால் அணுகு முறையில் அதிரடியாக விளையாடுவதாக சமூக வலைதளத்தில் குறிப்பிட்டிருந்தார். தற்பொழுது இதற்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
இதையும் படிங்க : ரோகித் கம்பீர் பிளான் பண்ணினது இதுதான்.. நாளைக்கு அந்த வேலைய செஞ்சு முடிப்போம் – ரவீந்திர ஜடேஜா உறுதி
இங்கிலாந்தின் பாஸ்பால் என்பதே விராட் பால் ரிஷப் பண்ட் பால்தான் எனவும், இதற்கு முன்பே உலக டெஸ்ட் கிரிக்கெட்டில் விவியன் ரிச்சர்ட்ஸ், வீரேந்திர சேவாக் மற்றும் கெயில் போன்றவர்கள் அதிரடியாக ஆடிவிட்டார்கள் என்றும், எனவே அதிரடியாக விளையாடினால் அது இங்கிலாந்து போல் கிடையாது எனவும் மைக்கேல் வாகன் கருத்துக்கு விமர்சனங்கள் இந்திய ரசிகர்களின் தரப்பில் இருந்து குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.