இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்து தொடரையும் கைப்பற்றியது.
இதில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் இந்த போட்டியில் அதிரடியாக விளையாடி 30 ரன்கள் குவித்ததன் மூலம் சிறப்பான சாதனை ஒன்றை படைத்திருக்கிறார்.
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று பல்லேகேலேவில் நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய இலங்கை அணி தொடக்கம் சிறப்பாக இருந்த போதிலும் அதற்கு பின்னர் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் குவித்தது.
அதற்கு பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணிக்கு மழை காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட 45 பந்துகளில் 72 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. இதை அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடினார். 15 பந்துகள் மட்டுமே எதிர்கொண்ட நிலையில், மூன்று பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன் 30 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
பின்னர் சூரியகுமார் யாதவ் 12 பந்துகளில் 26 ரன்களும், ஹர்திக் பாண்டியா 9 பந்துகளில் 22 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தனர். இந்த போட்டியில் 30 ரன்கள் குவித்த ஜெய்ஸ்வால் ஒட்டுமொத்தமாக 2024ஆம் ஆண்டு குறைந்த போட்டிகளில் விளையாடி ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார். இந்த போட்டியோடு சேர்த்து மொத்தமாக இந்த ஆண்டு டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி 1023 ரன்கள் குவித்து இருக்கிறார்.
இந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் 740 ரன்கள் குவித்திருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த ஆண்டில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் இவரே முதல் இடத்தில் இருக்கிறார். அது மட்டுமில்லாமல் டி20 போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி 175 ஸ்டிரைக் ரேட் உடன் 283 ரன்கள் குவித்து இருக்கிறார். ஒட்டுமொத்தமாக 13 போட்டிகளில் விளையாடி 64 பேட்டிங் சராசரியுடன் 104 ஸ்ட்ரைக் ரேட்டில் 1023 ரன்கள் குவித்திருக்கிறார். இதில் இரண்டு சதங்களும் ஐந்து அரை சதங்களும் அடங்கும்.
இதையும் படிங்க:யூபி டி20 2024.. எல்லாரையும் விட பெரிய தொகைக்கு போன புவனேஸ்வர் குமார்.. புது ரெக்கார்ட்
இவருக்கு அடுத்த இடத்தில் குஷால் மெண்டிஸ் 26 போட்டிகளில் விளையாடி 888 ரன்களும், இந்தியாவின் ரோகித் சர்மா 17 போட்டிகளில் விளையாடி 823 ரன்களும் குவித்திருக்கின்றனர். இந்தியாவின் சுப்மன் கில் 13 போட்டிகளில் விளையாடி 725 ரன்கள் குவித்திருக்கிறார். இந்த பட்டியலில் விராட் கோலி இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






