இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான டி20 போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியிடம் தோல்வி அடைந்திருக்கிறது.
இந்த சூழ்நிலையில் போட்டியின் இறுதிக்கட்டத்தில் இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர் செய்த காரியம் ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் குவித்தது. ஜிம்பாப்வே அணிதரப்பில் க்லைவ் மதான்டே அதிகபட்சமாக 29 ரன்கள் குவித்தார். இதை அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி எளிதில் வெற்றி பெற்று விடும் என்றே அனைவரும் கருதினார்கள்.
ஆனால் ஜிம்பாப்வே அணி பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சினால் இந்திய இளம் அணி தடுமாற ஆரம்பித்தது. அணியின் கேப்டன் கில்லை தவிர மற்ற அனைத்து வீரர்களும் குறைந்த ரன்களில் வெளியேற, இந்திய அணி 47 ரன்களில் விளையாடிக் கொண்டிருந்த போது ஆறாவது விக்கெட்டாக கில்லும் வெளியேறினார்.
அவர் மட்டுமே 29 பந்துகளில் 31 ரன்கள் குவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்குப் பிறகு வாஷிங்டன் சுந்தர் ஒரு முனையில் போராட மறுமுனையில் அவருக்கு கம்பெனி கொடுத்த ஆவேஷ் கான் 12 பந்துகளில் 16 ரன்கள் குவித்து ஒரு சிறிய கேமியோவை விளையாடிவிட்டு சென்றார். பின்னர் அவரும் ஆட்டம் இழந்து வெளியேற, ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் மட்டும் களத்தில் இருந்தார். அப்போது இந்திய அணியின் 6 பந்துகளில் 16 ரன்கள் தேவைப்பட்டது.
அப்போது கடைசி ஓவரை ஜிம்பாப்வே அணியின் கத்தாரா வீச, அதனை எதிர்கொண்ட வாஷிங்டன் சுந்தர் முதல் பந்தில் ரன்கள் எதுவும் எடுக்கவில்லை. பின்னர் இரண்டாவது பந்தில் இரண்டு ரன்கள் எடுக்க, நான்கு பந்துகளில் 14 ரன்கள் தேவைப்பட்டது. 19.3வது பந்தை வீசிய கத்தாரா ஆப்சைடை நோக்கி வீச, அதை பவுண்டரிக்கு அடிக்கும் முயற்சியில் சுந்தர் ஈடுபட, பவுண்டரி லைனில் இருந்த கேம்ப்பெல் அதனை அற்புதமாக ஃபீல்டிங் செய்து பௌண்டரியை தடுத்தார். அந்த பந்தில் இரண்டு ரன்கள் எடுக்க வாய்ப்பு இருந்தும் ஒரு ரன் கூட ஓடவில்லை. பின் 3 பந்துகளில் 14 ரன்கள் தேவைப்பட்டபோது கடைசி ஓவரின் நான்காவது பந்தையும் டாட் செய்தார்.
இதையும் படிங்க:டிஎன்பிஎல் 2024.. பேட்டிங்கில் ஓபனிங் பவுலிங் அசத்தல்.. அஸ்வின் காட்டிய நெருப்பு டெடிகேஷன்
அதாவது 19.4வது பந்தில் சுந்தர் ஒரு ரன் எடுத்திருந்தால் கலீல் அகமது ஒருவேளை அடுத்த இரண்டு பந்துகளையும் சிக்சர் அடித்திருக்கும் நிலையில் இந்திய அணி டிரா செய்திருக்கும். அல்லது சுந்தர் இரண்டு ரன்கள் எடுத்திருந்தால் அடுத்த இரண்டு பந்துகளையும் ஒருவேளை அவரே சிக்சர் அடித்திருக்கும் நிலையில் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும். இது எதுவுமே அவர் செய்யாத போது இந்திய அணி அங்கேயே தோல்வி அடைந்து விட்டது. இதனால் நான்காவது பந்தில் சுந்தர் ஏன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.