தமிழ்நாடு பிரிமியர் லீக் டிஎன்பிஎல் எட்டாவது சீசன் நேற்று முதல் தொடங்கிய நடைபெற்று வருகிறது. இன்று ரவிச்சந்திரன் அஸ்வின் கேப்டனாக இருக்கும் திண்டுக்கல் டிராகன்ஸ், ஆண்டனி தாஸ் கேப்டனாக திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதிக் கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ரவிச்சந்திரன் சிறப்பான பந்துவீச்சில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்றைய போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த முறை திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரராக வந்த கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் 6 பந்தில் ஐந்து ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
ஆனால் இன்னொரு துவக்க ஆட்டக்காரர் சிவம் சிங் மிகச்சிறப்பாக விளையாடி 51 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 78 ரன்கள் எடுத்தார். பாபா இந்தரஜித் 28 பந்துகளில் 33 ரன்கள், பூபதி குமார் 16 பந்துகளில் 23* ரன்கள் எடுக்க, 20 ஓவர்களில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியின் கே.ஈஸ்வரன் 6 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிக்கு சியாம் சுந்தர் 22 பந்தில் 23 ரன்கள், சஞ்சய் யாதவ் 28 பந்தில் 24 ரன்கள், ராஜ்குமார் 17 பந்தில் 31 ரன்கள் எடுத்தார்கள். அந்த அணி 20 ஓவர்களில் 8 எட்டு விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் மட்டுமே எடுத்தது. முடிவில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியின் டாப் ஆர்டரில் முக்கிய மூன்று விக்கெட்டுகளை ரவிச்சந்திரன் அஸ்வின் கைப்பற்றினார். திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் வெற்றிக்கு அவரது பந்துவீச்சு முக்கிய காரணமாக இருந்தது. இன்று அவர் நான்கு ஓவர்கள் பந்துவீசி 18 ரன்கள் மட்டுமே விட்டுத் தந்து மூன்று விக்கெட் எடுத்தார்.
இதையும் படிங்க : இந்திய அணியின் மாபெரும் உலக சாதனை.. மண்ணள்ளி போட்ட கத்துக்குட்டி ஜிம்பாப்வே.. 2வது முறையும் கைநழுவிய சோகம்
ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதல் இடத்திலும், டெஸ்ட் கிரிக்கெட் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் இரண்டாவது இடத்திலும் இருக்கிறார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். இதெல்லாம் இருந்த போதும் கூட, சாதாரணமாக உள்ளூரில் நடக்கும் ஒரு டி20 லீக் தொடருக்கு அவர் காட்டும் ஆர்வமும் அர்ப்பணிப்பும் பெரிய பாராட்டை தற்பொழுது பெற்று வருகிறது. கிரிக்கெட்டை உண்மையாக நேசிக்கும் ஒருவரால் தான் எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் இப்படியான தொடர்களில் விளையாட முடியும்!






