இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை ஆட்டக்காரரான விராட் கோலி இன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் மற்றொரு இளம் வீரரான சுப்மான்கில் விராட் கோலியின் ஓய்வு குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
விராட் கோலி ஓய்வு
இந்திய கிரிக்கெட்டில் முடி சூடா மன்னனாக விளங்கி வரும் விராட் கோலி கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இந்திய அணி உலக கோப்பையை வென்ற பின்னர் டி20 ஃபார்மெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த சூழ்நிலையில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வந்த விராட் கோலி சமீபத்தில் நடைபெற்ற நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு தொடர்களில் பெரிய அளவில் சோபிக்கவில்லை.
இந்த சூழ்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ரோஹித் சர்மா டெஸ்ட் பார்மெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருந்த நிலையில், விராட் கோலி விரைவில் அறிவிப்பார் என்ற தகவல்கள் வெளிவந்தது. ஆனால் பிசிசிஐ தொடர்ந்து விராட் கோலியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விராட் கோலி தொடர்ந்து விளையாடுவார் என்று கூறப்பட்டது. ஆனால் அது அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விராட் கோலி தற்போது ஓய்வு முடிவை அறிவித்திருக்கிறார். இது கிரிக்கெட் உலகில் தற்போது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இது குறித்து சுப்மான் கில் உணர்ச்சி மிகுந்த கருத்துக்களை கூறியிருக்கிறார்.
சுப்மான் கில் உணர்ச்சி பதிவு
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “பாஜி, நான் உங்களுக்காக எழுதும் எதுவும் நான் என்ன உணர்கிறேன் அல்லது நீங்கள் என் மீது ஏற்படுத்திய தாக்கம் என்ன என்பதை ஒருபோதும் உண்மையிலேயே பிரதிபலிக்காது. எனக்கு 13 வயதாக இருக்கும் போது நீங்கள் பேட்டிங் செய்வதை பார்த்து அந்த வகையான ஒரு ஆற்றலை எப்படி மைதானத்திற்கு கொண்டுவர முடியும் என்பது குறித்து யோசிப்பது, உங்களுடன் மைதானத்தை பகிர்ந்து கொண்டது, நீங்கள் செய்ததை வேறு யாராலும் செய்ய முடியாது என்று உணர்ந்தது வரை நீங்கள் ஒரு தலைமுறையை மட்டும் ஊக்கப்படுத்தவில்லை மில்லியன் கணக்கான மக்களின் மனநிலையை மறுவடிவமைத்துள்ளீர்கள்.
இதையும் படிங்க:2027 ODI உலக கோப்பை.. ரோகித் விராட் ஆடுவதில் திடீர் சிக்கல்.. பிசிசிஐ என்ன செய்யும்?.. முழு அலசல்
டெஸ்ட் கிரிக்கெட் உங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பது குறித்து எனக்கு நன்றாகவே தெரியும். எங்கள் தலைமுறை உங்களைப் போன்றே நெருப்பையும், அர்ப்பணிப்பு உணர்வையும் முன்னோக்கி எடுத்துச் செல்லும் என்று நம்புகிறேன். நீங்கள் அளித்த எல்லாவற்றிற்கும் நன்றி. ஓய்வுக்கு வாழ்த்துக்கள்” என்று கில் உணர்வு பூர்வமாக கருத்துக்களை பதிவிட்டு இருக்கிறார். மேலும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் என அனைவரும் விராட் கோலிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.