கான்பூரில் நடைபெற்ற இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணியின் அபாரமான ஆட்டத்தால் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரையும் முழுமையாக கைப்பற்றி இருக்கிறது.
இந்த இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் தொடர் நாயகன் விருது பெற்றதோடு தனது கிரிக்கெட் எதிர்காலம் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
டெஸ்ட் கிரிக்கெட் பொருத்தவரை இந்திய அணிக்கு மிக முக்கிய தூணாக விளங்குபவர் ரவிச்சந்திரன் அஸ்வின். உள்நாடு, வெளிநாடு என எங்கு விளையாடினாலும் தனது சிறந்த பந்துவீச்சின் மூலமாக இந்திய அணிக்கு சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தக் கூடியவர். இதுவரை 102 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் அஸ்வின், மொத்தமாக 527 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார். தற்போது 38 வயதாகி வரும் நிலையில் இன்னும் சில வருடங்கள் இந்திய கிரிக்கெட்டுக்காக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கதேச அணிக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கில் களமிறங்கி அஸ்வின் 113 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் பந்து வீச்சில் ஆறு விக்கெட்டுகளும் வீழ்த்தினார். மேலும் கான்பூரில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இரண்டு விக்கெட்டுகளும் இரண்டாவது இன்னிங்ஸில் மூன்று விக்கெட்டுகளும் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
இந்த நிலையில் தனது எதிர்கால கிரிக்கெட் வாழ்க்கை குறித்து பேசிய அஸ்வின் ” எனக்கு தெரியவில்லை உங்கள் கால்களில் மைல்கள் தூரம் ஓடக்கூடிய அளவுக்கு இன்னும் திறமை இருந்தால் நன்றாக செயல்பட முடியும் என்று நினைக்கிறேன். இது நாளுக்கு நாள் சிந்திக்க கூடிய விஷயம் என்று நினைக்கிறேன். நான் சொன்னது போல ஏதாவது முயற்சி செய்து அதில் பயிற்சி செய்ய முடியும் என்ற உற்சாகம் என்னை தூண்டுகிறது. அதுவே என்னை மகிழ்வாகவும் வைத்திருக்கிறது.
இப்போது வரை அந்த உத்வேகம் என்னை இன்னும் வேகமாக செயல்பட வைத்துக் கொண்டிருக்கிறது. இந்திய அணிக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் இது எவ்வளவு காலம் நீடிக்கும் என்று எனக்கு தெரியவில்லை. ஒரே நேரத்தில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டியில் விளையாடுவதைப் போல இதைப்பற்றி தேவையில்லாமல் யோசிக்க விரும்பவில்லை” என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:என்னை இந்த ஒரு இந்திய வீரர் ரொம்ப எரிச்சல் படுத்துவார்.. அதுக்கான காரணம் இதுதான் – ஸ்டீவ் ஸ்மித் பேட்டி
இனி இந்திய நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகளிலும், அதற்குப் பிறகு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டியிலும் விளையாட இருப்பதால் இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வினின் பங்கு மிக முக்கியமாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.