சன்ரைசர்ஸ் அணியின் இளம் வீரரான நிதிஷ்குமார் ரெட்டி ஐபிஎல் தொடரில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் கலக்கியதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
அப்போது நடைபெற்ற தொடரில் விராட் கோலி உடன் ஏற்பட்ட அனுபவம் குறித்து சில முக்கிய கருத்துகளை பகிர்ந்திருக்கிறார்.
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணியில் சிறப்பாக விளையாடிய ஆல் ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி 6 கோடி ரூபாய்க்கு அந்த அணியால் தக்க வைக்கப்பட்டார். இதனால் அவருக்கு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வாய்ப்பு கிடைத்தது. அந்தத் தொடரில் சிறப்பாக விளையாடி சதம் அடித்து தனது திறமையை உலகிற்கு நிரூபித்தார். மேலும் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரிலும் நிதிஷ்குமார் ரெட்டி சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல விராட் கோலியின் மீதும் இந்த ஆண்டு பெங்களூர் அணியில் அதிக அளவு எதிர்பார்ப்பு இருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற சிவப்பு பந்து தொடரில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தினாலும், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதனால் ஐபிஎல் தொடரிலும் அவர் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் நிதிஷ்குமார் ரெட்டி ஆஸ்திரேலியா தொடரின் போது அவரது பேட்டை விரும்பியதாகவும் ஆனால் கேட்பதற்கு தயக்கப்பட்ட போது விராட் கோலி அதை அறிந்து கொடுத்ததாக மகிழ்வுடன் சில கருத்துக்களை வெளிப்படுத்தி இருக்கிறார்.
விராட் கோலியிடம் கேட்க தயங்கினேன்
இதுகுறித்து நிதீஷ்குமார் ரெட்டி கூறும் போது “எனக்கு விராட் பாயின் பேட் மிகவும் பிடித்திருந்தது. ஆனால் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் போது அவரிடம் நான் பேட் கேட்க தயங்கினேன். ஆனால் அப்போது என்னுடைய காலணியில் அவரிடம் ஆட்டோகிராப் வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்து அதில் வாங்கினேன். ஆனால் அப்போது அவர் நித்திஷ் பொறு என்று கூறி, அவர் பையைத் திறந்து அவரது பேட்டை எனக்கு கொடுத்தார்.
இதையும் படிங்க:23.75 கோடி.. கையில் இருந்ததை மொத்தமா விட்டேன்.. ஷாருக் கான் சொன்னது நடந்தது – வெங்கடேஷ் ஐயர் பேட்டி
அந்த தருணம் எனக்கு அதிர்ச்சியாகவும் அதே சமயம் மகிழ்ச்சியாகவும் இருந்தது. அப்போதே அவரிடம், அதில் கையெழுத்து போடச் சொல்லி அதனை வாங்கிக் கொண்டேன்” என்று கூறியிருக்கிறார். ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய நிதீஷ் குமார் ரெட்டி 298 ரன்கள் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அதிகபட்சமாக ஒரு போட்டியில் 114 ரன்கள் எடுத்திருந்தார்.






