வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்டில் வெற்றி பெற்றதற்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டி மற்றும் அதற்குப் பிறகு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இதில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 டெஸ்ட் தொடருக்கு முகமது ஷமி காயம் காரணமாக விலக்கப்பட்டிருக்கிறார் என்று பரவிய செய்திக்கு முகமது ஷமியே அதற்கு தகுந்த விளக்கத்தை கொடுத்து இருக்கிறார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பைக்குப் பிறகு காயம் காரணமாக வெளியேறிய முகமது ஷமி அதற்குப் பிறகு இந்திய சர்வதேச அணியில் பங்கு பெற்று எந்த போட்டியிலும் விளையாடவில்லை. மேலும் இந்தியாவில் நடைபெறும் உள்நாட்டு தொடரான ஐபிஎல் தொடரிலும் பங்கு பெறவில்லை. மேலும் இந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையிலும் அவர் பங்கு பெறவில்லை. இந்த நிலையில் அவர் காயம் குணமாகி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதற்கு முன்பாக ஷமி புதிய முழங்கால் காயத்தை எதிர்கொண்டு இருக்கிறார் எனவும், இதனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கு பெற மாட்டார் என்றும் செய்திகள் பரவியது. இந்த செய்தியை அறிந்த முகமது ஷமி இதுபோன்ற தவறாக பரப்பப்படும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் எனவும் எனது தரப்பிலோ அல்லது பிசிசிஐ தரப்பிலோ அதிகாரப்பூர்வ தகவல் வரும் வரை எந்த ஒரு அதிகாரப்பூர்வமற்ற தகவலை நம்ப வேண்டாம் எனவும் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “எதற்காக இப்படி ஆதாரமற்ற வதந்திகள் பரப்பப்படுகின்றன என்று தெரியவில்லை. நான் கடினமாக உழைத்து என்னால் முடிந்தவரை மீண்டு வருவதற்கு முயற்சி செய்து வருகிறேன். பார்டர் கவாஸ்கர் டிராஃபியில் இருந்து வெளியேறியதாக நானும் அல்லது இந்திய கிரிக்கெட் வாரிய தரப்பில் இருந்தோ எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவரவில்லை.
அதிகாரப்பூர்வமற்ற ஆதாரங்களில் இருந்து வெளிவரும் செய்திகளுக்கு மக்கள் கவனம் செலுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இது போன்ற போலியான பொய்யான தகவல்களை பரப்புவதை முதலில் நிறுத்துங்கள். நானாக அறிக்கைகளை வெளியிடும் முன் எதையும் நம்ப வேண்டாம்” என்று கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க:ரோகித் வாழ்க்கையில் பிரச்சனை வந்தா.. பும்ராக்கு போன் பண்ண மாட்டாருனு நம்பறேன் – தினேஷ் கார்த்திக் பேச்சு
இதனால் ஷமி அடுத்து நடைபெற உள்ள ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மீண்டும் இந்திய அணிக்காக களமிறங்கி விளையாடுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. ஷமி காயம் குணமடைந்து மீண்டும் இந்திய அனைத்து திரும்பினால் அது மிகப்பெரிய அளவில் பந்துவீச்சில் அணிக்கும் மேலும் வலு சேர்ப்பதாக அமையும்.