இந்த டி20 உலக கோப்பையை வென்றதோடு அடுத்த தலைமுறை வீரர்களுக்கு வழி விடும் விதமாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் டி20 ஃபார்மேட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டனர். இந்த நிலையில் விராட் கோலியின் செயல் திறன் மற்றும் ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிப் ஆகியவை குறித்து வேகப்பந்துவீச்சாளர் அர்ஸ்தீப் சிங் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பையில் விராட் கோலி பேட்டிங்கில் சீராக இல்லாவிட்டாலும் இறுதி போட்டியில் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். மேலும் ரோகித் சர்மா பேட்ஸ்மேன் ஆகவும் அதே சமயத்தில் கேப்டனாகவும் சிறந்த முடிவுகளை எடுத்து உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.
இது குறித்து அர்ஸ்தீப் சிங் கூறும் பொழுது “டி20 கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அழியாத முத்திரையை பதித்திருக்கின்றனர். அவர்களது பங்களிப்பு மகத்தானது. அது மட்டுமல்லாமல் அவர்களது பாரம்பரியம் அடுத்து வரும் இளம் தலைமுறை வீரர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும். ரோகித் பாயின் பேட்டிங் மற்றும் கூர்மையான கேப்டன்ஷி ஆகியவை இந்த டி20 வடிவத்தில் புதிய பெஞ்ச் மார்க்கை அமைத்திருக்கிறது.
விராட் பாயின் நிலையான செயல்பாடுகள் மற்றும் கிரிக்கெட்டில் அவரது அர்ப்பணிப்பு ஆகியவை மூலம் உலகெங்கிலும் உள்ள இளைஞர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறார். ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிப் குறித்து கூற வேண்டுமானால், அவரின் தலைமையில் கீழ் விளையாடுவது ஒரு நம்ப முடியாத அனுபவமாக எனக்கு எப்போதும் இருக்கும். ரோகித் சர்மா நிச்சயம் ஒரு பந்துவீச்சாளர்களின் கேப்டனாக இருக்கிறார். தனது அணி வீரர்களுக்கு சுதந்திரம் அளிப்பது மட்டுமல்லாமல் அவர்களது போக்கில் செயல்பட உதவுகிறார்.
டிரெஸ்ஸிங் ரூமில் சூழல்களை எப்போதும் பாசிட்டிவாக வைத்திருப்பார். மேலும் அவரது நேர்மறையான எண்ணம் ஆட்டத்தில் எப்போதுமே இக்கட்டான சூழ்நிலைகளில் உதவுகிறது. அவரது தலைமைத்துவ பண்பில் எனக்கு எப்போதுமே பிடித்தது களத்தில் அவரது அமைதியான நடத்தை ஆகும். அவர் எப்போதுமே தனது வீரர்களை ஆதரிப்பார். நமது இயல்பான விளையாட்டை விளையாடுவதற்கான முழு நம்பிக்கையும் தருகிறார்.
இதையும் படிங்க:கோலி பெரிய பேட்ஸ்மேன்.. ஆனா இந்தவொரு காரணத்துக்காக பாகிஸ்தான் வந்துதான் ஆகணும் – யூனிஸ் கான் பேட்டி
போட்டியை அணுகும் முறை மற்றும் அவரது செயல் திறன் ஆகியவை உண்மையிலேயே பிரமிப்பாக இருக்கிறது. போட்டிகளின் வித்தியாசமான சூழ்நிலைகளை எவ்வாறு அணுகுவது என்று நான் அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்கிறேன்” என்று அர்ஸ்தீப் சிங் கூறி இருக்கிறார்.