இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து தொடரையும் இழந்திருக்கிறது. இந்த நிலையில் தோல்வி குறித்து கேப்டன் ரோகித் சர்மா பேசியிருக்கிறார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் பெங்களூர் மைதானத்தில் இந்திய அணி தோல்வி அடைந்து இருந்தது. இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி மகாராஷ்டிரா புனே மைதானத்தில் நடைபெற்றது.
மகுடத்தை இழந்த இந்திய அணி
இந்திய அணி கடந்த 12 வருடங்களாக 4,331 நாட்களாக சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை கூட இழக்காமல், சர்வதேச அளவில் எந்த அணிகளை விடவும் உள்நாட்டில் மிகப்பெரிய டெஸ்ட் அணியாக வலம் வந்து கொண்டு இருந்தது. ஒரு அணியாக சேர்ந்து இந்திய வீரர்கள் தொடர் வெற்றிகளை உள்நாட்டில் பெற்று வந்தார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.
இது குறித்து ரோஹித் சர்மா கூறும் பொழுது “இது பெரிய ஏமாற்றமாக இருக்கிறது. நாங்கள் இதை எதிர்பார்க்கவில்லை. நியூசிலாந்து எங்களை விட சிறப்பாக கிரிக்கெட் விளையாடியது. நாங்கள் சவால்களுக்கு பதில் அளிக்க தவறி விட்டோம். அதனால்தான் இந்த இடத்தில் இருக்கிறோம். 20 விக்கெட் எடுப்பது எவ்வளவு முக்கியமோ அதற்கு தேவையான ரன்களை எடுப்பது முக்கியம்”
தோல்விக்கு காரணம் இதுதான்
“நாங்கள் பேட்டிங்கில் எல்லோரும் சேர்ந்து சரியான ஸ்கோர் எடுக்காதது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.மேலும் 100 ரன் முன்னிலையை விட்டுக் கொடுத்தோம். இதுதான் பிரச்சனையாக மாறியது. இந்த விக்கெட் பேட்டிங் செய்வதற்கு ரொம்ப கடினமானது கிடையாது. எனவே நாங்கள் ரன் துரத்த முடியும் என்று நினைத்தோம். ஆனால் தொடர்ச்சியாக வந்த சவால்களை சமாளிக்க முடியவில்லை. அவர்கள் இரண்டாவது இன்னிங்ஸில் மூன்று விக்கெட்டுக்கு 200 ரன் முன்னிலையில் இருந்தார்கள். அவர்களை அங்கிருந்து கட்டுப்படுத்தியது சிறப்பானது”
இதையும் படிங்க : 4331 நாட்கள் 12 வருடங்கள்.. பெருமையை இழந்த இந்திய அணி.. நியூசிலாந்து வரலாற்று வெற்றி
“ஆனால் நாங்கள் போதுமான அளவுக்கு பேட்டிங் செய்யவில்லை. நியூசிலாந்து சிறப்பாக விளையாடியது அதனால் வெற்றி பெற்றது. நாங்கள் அடுத்து மும்பையில் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு வந்து நல்ல முறையில் விளையாடி அதை வெல்ல விரும்புகிறோம்” என்று கூறியிருக்கிறார்.






