இன்று தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-1 எனக் கைப்பற்றியது.
இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில், முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்று தொடர் சமநிலையில் இருந்தது. இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதிரடி ஆரம்பம் சோக முடிவு
முதலில் பேட்டிங் செய்ய வந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் குயிண்டன் டி காக் எண்பது பந்துகளில் அதிரடியாக சதம் அடித்து, மொத்தம் 89 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் உடன் 106 ரன்கள் எடுத்தார். இவருடன் இணைந்து விளையாடிய கேப்டன் டெம்பா பவுமா 67 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார்.
இதைத்தொடர்ந்து பிரீட்ஸ்கீ 24, டிவால்ட் பிரிவிஸ் 29, கேசவ் மகாராஜ் 20 ரன்கள் எடுத்தார்கள். இறுதியாக அதிரடியாக ஆரம்பித்ததின் ஆப்பிரிக்கா 270 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் மற்றும் பிரசித் கிருஷ்ணா நான்கு விக்கெட் வீழ்த்தினார்கள்.
ஜெய்ஸ்வால் சதம்
இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணிக்கு முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக 155 பந்துகளில் 155 ரன்கள் வந்தது. சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா 73 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 75 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த ஜெய்ஸ்வால் சதமும் மற்றும் விராட் கோலி அரை சதமும் அடித்து இரண்டாவது விக்கெட்டுக்கு ஆட்டம் இழக்காமல் 84 பந்துகளில் 116 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். ஜெய்ஸ்வால் 121 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் 116 ரன்கள், விராட் கோலி 45 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உடன் 65 ரன்கள் எடுத்தார்கள்.
இதையும் படிங்க : 1735.. லெஜெண்ட் சச்சினின் சாதனையை காலி செய்த ரோகித் சர்மா.. மெகா பார்ட்னர்ஷிப்.. இந்திய அணி முன்னிலை
இறுதியாக இந்திய அணி 39.5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் 2-1 எனத் தொடரை கைப்பற்றியது.






