இன்று ஜப்பான் அணிக்கு எதிரான ஒரே ஒரு போட்டி கொண்ட டி20 தொடரில் இந்திய அணி தட்டுத் தடுமாறி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது.
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். மேலும் இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட்டு ஐந்து ஓவர்களாக குறைக்கப்பட்டது. இரண்டு பந்துவீச்சாளர்கள் இரண்டு ஓவர்கள் வீசலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இந்திய அணிக்காக களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர்களில் சஞ்சு சாம்சன் 7 பந்துகளில் 9 ரன்கள் எடுத்தார். அபிஷேக் ஷர்மா முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆனார். இவர்களைத் தொடர்ந்து இஷான் கிஷான் 6 பந்தில் 3 ரன்கள், ஸ்ரேயாஸ் ஐயர் அதிகபட்சமாக 12 பந்தில் 16 ரன்கள் எடுத்தார்கள். இந்திய அணி 5 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 32 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதைத் தொடர்ந்து களம் இறங்கிய ஜப்பான் அணி இந்திய அணியை பேட்டிங்கில் பயமுறுத்தியது. கடைசி ஓவரின் வெற்றிக்கு எட்டு ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் எட்டு விக்கெட்டுகள் ஜப்பான் இடம் இருந்தது. அந்த ஓவரை வீசிய அக்சர் படேல் ஐந்து ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இந்திய அணியை இரண்டு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார். ஜப்பான் அணி இறுதியில் 30 ரன்கள் மட்டுமே எடுத்தது.
உலக டி20 தரவரிசையில் ஜப்பான் அணி முதல் 40 இடங்களில் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்திருந்தால், டி20 வரலாற்றில் இந்திய அணிக்கு மிக மோசமான தோல்வியாக அமைந்திருக்கும்.