இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் இந்திய இளம் வீரர்களின் அபாரமான ஆட்டத்தால் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா இங்கிலாந்து முதல் டி20
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து முதலில் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிற நிலையில் முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. இதன்படி தொடக்க வீரர்களின் இரண்டு விக்கெட்டுகளையும் அர்ஸ்தீப் சிங் விரைவாக வீழ்த்த, அதற்குப் பிறகு சுழற் பந்துவீச்சாளர்கள் தங்களது வேலையை காட்ட ஆரம்பித்தனர். இதில் அணியின் கேப்டன் பட்லர் மட்டுமே அணியின் மானத்தை காப்பாற்றினார்.
44 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் 8 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் என 68 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இவரது பொறுப்பான ஆட்டத்தால் தான் இங்கிலாந்து அணி 132 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பந்துவீச்சில் வருண் சக்கரவர்த்தி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். மேலும் ஹர்திக் பாண்டியா, அக்சார் மற்றும் அர்ஸ்தீப் சிங் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.
ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக்சர்மா ஆகியோர் தொடக்கத்திலேயே இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார்கள். இதில் சாம்சன் 20 பந்துகளில் 26 ரன்கள் எடுத்த நிலையில் ஆர்ச்சரின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்து வெளியேறினார். அதற்குப் பின்னர் களமிறங்கிய கேப்டன் சூரியகுமார் யாதவ் தனது மூன்றாவது பந்தில் அதே ஆர்ச்சரின் பந்துவீச்சில் நடையை கட்டினார்.
இதையும் படிங்க:முன்னாள் ஆர்சிபி வீரரின் சாதனையை முறியடித்த அர்ஸ்தீப்.. டி20 கிரிக்கெட்டில் அபார சாதனை.. இங்கி முதல் டி20
மறுமுனையில் தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா தனது அபாரமான அதிரடி ஆட்டத்தை விளையாடிக் கொண்டிருந்தார். வெறும் 34 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 5 போர் 8 சிக்ஸ் என 79 ரன்கள் எடுத்த நிலையில் அடில் ரசீதின் பந்துவீச்சில் வெளியேறினார். இதற்குப் பின்னர் திலக் வர்மா 19 ரன் மற்றும் ஹர்திக் பாண்டியா 3 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 12.5 ஓவரில் 133 ரன்கள் குவித்து மெகா வெற்றியை பதிவு செய்தது. சிறப்பாக விளையாடிய அபிஷேக் ஷர்மா ஆட்டநாயகன் விருது பெற்றார். ஈடன் காரன் மைதானத்தில் இந்திய அணி தொடர்ச்சியாக 2016ஆம் ஆண்டு முதல் 7 டி20 வெற்றிகளை பெற்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது