இன்று நடைபெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி ரன்கள் 61 வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தற்போது இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்கு தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப் பயணம் செய்திருக்கிறது. இன்று இந்த தொடரில் முதல் போட்டியில் டர்பன் நகரத்தில் கிங்ஸ் மீட் மைதானத்தில் நடைபெற்றது.
சஞ்சு சாம்சன் சாதனை சதம்
இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா 8 பந்துகளில் 7 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த சஞ்சு சாம்சன் மற்றும் சூரியகுமார் யாதவ் 37 பந்துகளில் 66 ரன் பாட்னர்ஷிப் அமைத்தார்கள். சூரியகுமார் யாதவ் 17 பந்தில் 21 ரன் எடுத்தார்.
இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த சஞ்சு சாம்சன் திலக் வர்மா 34 பந்துகளில் 77 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். திலக் வர்மா 18 பந்தில் 33 ரன் எடுத்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன் 47 பந்தில் சதம் அடித்து, 50 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 10 சிக்ஸர்கள் உடன் 107 ரன்கள் எடுத்தார்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து இரண்டு சதங்கள் அடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது. தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சில் ஜெரால்டு கோட்சி 3 விக்கெட் பற்றினார்.
போட்டியை மாற்றிய வருண் சக்கரவர்த்தி
இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் எய்டன் மார்க்ரம் 8, ரிக்கி ரிக்கல்ட்டன் 21, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 11 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதற்கு அடுத்து தென் ஆப்பிரிக்க அணியின் முதுகெலும்பான ஹென்றி கிளாஸன் 25, டேவிட் மில்லர் 18 இருவரையும் ஒரே ஓவரில் வெளியேற்றி வருண் சக்கரவர்த்தி ஆட்டத்தை இந்தியா பக்கம் திருப்பினார்.
இதையும் படிங்க : 12 ஃபோர்ஸ்.. ஜெய்ஸ்வாலின் அண்ணன் மாஸ் பேட்டிங்.. தம்பி ஸ்டைலில் 2024 ரஞ்சி டிராபியில் அசத்தல்
இறுதியாக தென் ஆப்பிரிக்க அணி 17.5 ஓவரில் 141 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் பந்துவீச்சில் வருண் சக்கரவர்த்தி மற்றும் ரவி பிஸ்னாய் மொத்தம் எட்டு ஓவர்கள் பந்து வீசி, இருவரும் தலா மூன்று விக்கெட் என ஆறு விக்கெட் கைப்பற்றினார்கள். மேலும் இந்த வெற்றி இந்த வருடத்தின் இந்திய அணியின் 22 ஆவது டி20 வெற்றியாக பதிவாகியது. இந்த ஆண்டில் அதிக டி20 வெற்றிகள் பெற்ற அணியாக இந்திய அணி இருக்கிறது.






