இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வைத்து சம்பவம் செய்த இந்திய பெண்கள் அணி! ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை!

0
319

இங்கிலாந்தில் 23 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் போட்டி தொடரை கைப்பற்றி இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி சாதனை படைத்திருக்கிறது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பெண்கள் அணி, முதல் கட்டமாக, மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அதில் இங்கிலாந்து பெண்கள் அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.

- Advertisement -

அதைத்தொடர்ந்து மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்றது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வீராங்கனைகள் அபாரமான பங்களிப்பை கொடுத்தனர். முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து பெண்கள் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 227 ரன்கள் அடித்திருந்தனர். இலக்கை துரத்திய இந்திய அணிக்கு துணை கேப்டன் மற்றும் துவக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தானா 91 ரன்கள் விலாசினார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் இறுதிவரை ஆட்டம் இழக்காமல் 74 ரன்கள் அடித்தார். மிடில் ஓவர்களில் யாஷ்டிகா அரைசதம் அடித்து நல்ல பங்களிப்பை கொடுத்ததால் இந்திய அணி 45 வது ஓவரில் இலக்கை எட்டி எழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரை 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் வைத்திருந்தது.

செப்டம்பர் 21ஆம் தேதி நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 333 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 143 ரன்கள் விளாசி இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். ஹர்லின் தியோல் 58 ரன்கள் அடித்து பக்கபலமாக நின்றார். துணை கேப்டன் ஸ்மிருதி மந்தானா 40 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு இந்திய வீராங்கனை ரேணுகா சிம்ம சொப்பனமாக விளங்கினார். இவர் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். 45 வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து பெண்கள் அணி 245 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்திருந்தது. இறுதியில் இந்திய பெண்கள் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. மூன்றாவது போட்டி வருகிற செப்டம்பர் 23ஆம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.

- Advertisement -

1976 ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் இந்திய பெண்கள் அணி, 1999ம் ஆண்டுக்கு முதல்முறையாக இங்கிலாந்து ஒருநாள் தொடரை கைப்பற்றியது. அதன் பிறகு இங்கிலாந்தில் இதுவரை ஒருநாள் தொடரை வென்றது இல்லை. இந்த குறையை தற்போது கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் வழி நடத்திய இந்திய பெண்கள் அணி நிவர்த்தி செய்திருக்கிறது. கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக ஒரு நாள் போட்டி தொடரை இங்கிலாந்து மண்ணில் கைப்பற்றிய பெண்கள் அணிக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

- Advertisement -