இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தும் வீரர் யார் என்பது குறித்து முன்னாள் வீரர்களான டெயில் ஸ்டெயின், இர்பான் பதான் ஆகியோர் கணிப்பு வெளியிட்டுள்ளனர். அதில் இருவரும் வருண் சக்கரவர்த்தியை தேர்வு செய்துள்ளனர்.34 வயதான வருண் தற்போது டி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் உள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டிகளில் அவரது புள்ளிவிபரம் அபாரமாக உள்ளது. 4 போட்டிகளில் 12 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். அவரது சராசரி 11.50 மட்டுமே உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 23 டி20 போட்டிகளில் 43 விக்கெட்டுகளை இந்திய அணிக்காக வீழ்த்தியுள்ளார்.
தொடரை வெல்வது யார்?
இதே போது டி20 தொடரின் முடிவை 3-2 என்று கணித்துள்ளனர். ஸ்டெய்ன் தென்னாப்பிரிக்கா வெல்லும் என்றும், இர்ஃபான் பதான் இந்தியா வெல்லும் என்றும் கணித்துள்ளார். கடைசியாக இரு அணிகளும் கடந்த ஆண்டு இறுதியில் தென்னாப்பிரிக்காவில் மோதின.அப்போது இந்தியா 3-1 என வென்றது.
இந்த ஆண்டு இதுவரை 15 டி20 போட்டிகளில் 13 போட்டியில் வென்று இந்தியா சிறந்த ஃபார்மில் உள்ளது. அதேநேரம் தென்னாப்பிரிக்கா கடந்த 9 டி20ஐ போட்டிகளில் 6 ஆட்டங்களில் தோற்றுள்ளது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்தியா, தென்னாப்பிரிக்கா டி20 தொடர் டிசம்பர் 9, செவ்வாய்க்கிழமை அன்று கட்டாக்கில் தொடங்குகிறது.
அதிக ரன்கள், சிக்சர் அடிக்கப்போவது யார்?
இந்த டி20 தொடரில் அதிக ரன்கள் அடிப்பவராக டேல் ஸ்டெய்ன் மற்றும் இர்ஃபான் பதான் இருவரும் ஒரே நபரைத் தேர்வு செய்தனர். அது இளம் வீரர் அபிஷேக் ஷர்மா ஆகும். இளம் அபிஷேக் 17 டி20 போட்டிகளில் 47-க்கும் மேல் சராசரியுடன் 196.36 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்து அசத்தி வருகிறார். வருணைப் போலவே அவரும் ஐசிசி டி20 பேட்ஸ்மேன் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் உள்ளார்.
இதையும் படிங்க: நேத்து களத்துல ரோகித் விராட் என்னென்ன செஞ்சாங்க தெரியுமா?.. யாருக்கு கிடைக்கும் இப்படி – ஸ்ரீகாந்த் பாராட்டு
ஆனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 4 போட்டிகளில் அவரது சராசரி 25-க்கும் கீழேதான் உள்ளது. எனினும் அவர்களுக்கு எதிராக 173-க்கும் மேல் ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்துள்ளார். அதிக சிக்ஸர்கள் அடிப்பவராக டேல் ஸ்டெய்ன் டேவிட் மில்லரை தேர்வு செய்துள்ளார். இர்ஃபான் பதான், பொறுத்தவரை அவர் சூர்யகுமார் யாதவை தேர்வு செய்துள்ளார்.






