திக் திக் ஆட்டத்தில் இந்தியா திரில் வெற்றி ; ஹர்திக் பாண்டியா செய்தது சரியா?

0
801
Ind vs Sl

ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி, இந்தியா வந்துள்ள இலங்கை அணி உடன் முதலில் நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இன்று மும்பையில் மோதியது!

இந்த போட்டிக்கான டாசில் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் சுப்மன் கில் மற்றும் சிவம் மாவி இருவரும் அறிமுகமானார்கள்!

துவக்க வீரர்களாக கில் மற்றும் இசான் கிசான் இருவரும் களமிறங்க கில் மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரும் தலா 7 ரன்களில் வெளியேறினார்கள். இதற்கு அடுத்து வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா ஓரளவு நிலைத்து நின்று 29 ரன்கள் சேர்த்தார். அடுத்து இசான் கிசான் 37 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணிக்கு தீபக் ஹூடா மற்றும் அக்சர் பட்டேல் இருவரும் இணைந்து 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை 20 ஓவர்கள் முடிவில் 162 ரன்கள் எட்ட வைத்தார்கள். தீபக் 41 ரன்களும் அக்ஸர் 31 ரன்களும் எடுத்தார்கள்!

இதற்கு அடுத்து களம் இறங்கிய இலங்கை இன்று அறிமுக போட்டியில் களம் கண்ட இந்திய வேகப்பந்துவீச்சாளர் சிவம் மாவி மிகப்பெரிய சிம்ம சொப்பனமாக விளங்கினார். துவக்க ஆட்டக்காரர் நிசாங்க, அடுத்து வந்த தனஞ்செய டி சில்வா மற்றும் ஹசரங்க ஆகியுள்ளது விக்கட்டுகளை முதலில் கைப்பற்றினார்.

ஒருபுறம் இலங்கை அணி இக்கட்டுகளை சீராக இழந்தாலும் இன்னொரு புறம் அந்த அணியின் கேப்டன் டசன் சனகா நிலைத்து நின்று விளையாடி இந்திய அணிக்கு பெரும் அச்சுறுத்தலை தந்தார். 15 ஓவர்கள் முடிவில் 110 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இலங்கை இழந்திருந்தது.

இதற்கு அடுத்து வந்த உம்ரன் மாலிக் மிகச் சிறப்பாக ஆடி வந்த இலங்கை கேப்டன் சனகாவை 45 ரன்களில் வீழ்த்தினார். இதற்கு அடுத்து மீண்டும் பந்து வீச வந்த சிவம் மாவி பதினெட்டாவது ஓவரில் மூன்றே ரன்கள் மட்டும் கொடுத்து ஒரு விக்கட்டையும் வீழ்த்தி அறிமுக போட்டியில் நான்கு விக்கெட்டுகளை பெற்றார்.

இதற்கு அடுத்து இரண்டு ஓவர்களில் வெற்றிக்கு 29 ரன்கள் தேவைப்பட்டது. 19ஆவது ஓவரை வீசிய ஹர்ஷல் பட்டேல் பதினாறு ரண்களை விட்டுத்தந்து ஆட்டத்தில் நெருக்கடியை ஏற்படுத்தி விட்டார். இறுதி ஓவரில் இலங்கை அணிக்கு 13 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது!

இந்த நிலையில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மும்பை வான்கடே மைதானத்தில் வேகப் பந்துவீச்சாளர் ஒருவர் பந்தை வீசுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்தை சுழற் பந்துவீச்சாளர் அக்சர் படேல் கையில் கொடுத்தார்.

முதல் பந்தை வைடாக வீசி, அடுத்த பந்தில் ஒரு ரன் தந்து, அடுத்த பந்தை ரன் இல்லாமல் செய்து, அடுத்த பந்தை சிக்ஸர் தந்து, அடுத்த பந்தில் ரன் இல்லாமல் செய்து, அடுத்த பந்தில் ஒரு ரன் தந்து, கடைசிப் பந்தில் மீண்டும் ஒரு ரன் தர, பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அறிமுக போட்டியில் விளையாடிய சிவம் மாவி நான்கு ஓவர்கள் பந்து வீசி 22 ரன்கள் விட்டுத் தந்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். உம்ரன் மாலிக் நான்கு ஓவர்கள் பந்து வீசி 27 ரன்கள் விட்டு தந்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தற்போது முதல் போட்டியை வென்று இந்திய அணி முன்னிலை வகிக்கிறது!