நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக துவங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்திருக்கிறது. அதிகபட்சமாக இந்திய அணிக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் சதம் அடித்திருக்கிறார்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் முதலில் பந்து வீசுவது என முடிவு செய்தது. இந்திய அணிக்கு நட்சத்திர பேட்ஸ்மேன்களில் ஜெய்ஸ்வால் தவிர்த்து மற்ற எல்லோருமே ஏமாற்றம் கொடுத்தார்கள். இந்திய அணி 144 ரன்களில் ஆறு முக்கிய விக்கெட்டுகளை இழந்துவிட்டது.
காப்பாற்றிய சுழல் கூட்டணி
இந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் சேர்ந்து சிறப்பாக விளையாடிய 195 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியை மீட்டார்கள். முதல்நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் எடுத்து வலிமையான நிலையில் இருந்தது.
நேற்றைய நாளில் ரவிச்சந்திரன் அஸ்வின் மிகச் சிறப்பாக விளையாடி சதம் அடித்து 102 ரன்கள் எடுத்திருந்தார். அவருடன் இணைந்து சிறப்பாக ரவிந்திர ஜடேஜா 86 ரன்கள் எடுத்திருந்தார். இன்றைய நாளில் இந்திய அணி எப்படியும் 400 ரன்கள் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
37 ரன் 4 விக்கெட்
இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளில் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணிக்கு மேற்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் ரவீந்திர ஜடேஜா 86 ரன்களில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ஆகாஷ் தீப் 17 ரன்கள் எடுத்தார். சதம் அடித்திருந்த ரவிச்சந்திரன் அஸ்வின் 113 ரன்கள் வெளியேறினார். கடைசி விக்கெட்டாக பும்ரா 7 ரன்களில் ஆட்டம் இழக்க இந்திய அணி 376 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
பங்களாதேஷ் அணியின் பந்து வீச்சு வரிசையில் இளம் வலதுகை வேகப்பந்துவீச்சாளர் ஹசன் மக்முத் ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றினார். டஸ்கின் அஹமத் 3, நாகித் ராணா 1, மெகதி ஹசன் மிராஸ் 1 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.
இதையும் படிங்க : கேஎல் ராகுல் இதெல்லாம் ஒரு பேட்டிங்கா.. முதல்ல அந்த விஷயம் உங்ககிட்ட இருக்கா – சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சனம்
இந்திய அணி 1974 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 70 ரன்னுக்கு 6 விக்கெட்டை இழந்து இறுதியாக 347 ரன் குவித்தது. கடைசி நான்கு விக்கெட்டுகள் சேர்ந்து 247 ரன்கள் எடுத்தார்கள். இந்த போட்டியில் 144 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்து இறுதியாக 376 ரன்னுக்கு இந்திய அணி ஆல் அவுட் ஆகி இருக்கிறது. கடைசி நான்கு விக்கெட்டுகள் 232 ரன்களை தாண்டி இருக்கிறது. 53 வருடத்திற்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி கடைசி நான்கு விக்கெட்டுகளில் 200 ரன்கள் தாண்டி எடுத்திருக்கும் அரிய சம்பவம் நடந்திருக்கிறது.