வெறும் 11 ஓவர்.. சச்சின் யுவராஜ் அதிரடி பேட்டிங்.. இங்கிலாந்து அணியை வீழ்த்திய இந்தியா.. மாஸ்டர்ஸ் லீக் 2025

0
5016

மாஸ்டர் இண்டர்நேஷனல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா மாஸ்டர்ஸ் அணியை எதிர்த்து இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணி களமிறங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய மாஸ்டர்ஸ் அணியின் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் இங்கிலாந்து அணி சார்பாக கேப்டன் இயன் மோர்கன் – மஸ்டர்ட் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

முதல் விக்கெட்டுக்கு 14 ரன்கள் சேர்த்த நிலையில், மஸ்டர்ட் 8 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து மிதும் வேகத்தில் மோர்கன் 14 ரன்களில் ஆட்டமிழக்க, அம்ப்ரூஸ் – மேடி கூட்டணி இணைந்து அதிரடியாக ரன்களை சேர்த்தது. இருவரும் விரைவாக ரன்கள் சேர்த்தாலும், இந்திய மாஸ்டர்ஸ் அணி ஃபீல்டர்கள் சிறப்பாக ஃபீல்டிங் செய்தனர்.

- Advertisement -

திணறிய இங்கிலாந்து

இதனால் அம்ப்ரூஸ் 23 ரன்களிலும், மேடி 25 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, பின்னர் வந்த வீரர்களில் யாரும் பெரியளவில் ரன்களை சேர்க்கவில்லை. கடைசி நேரத்தில் ட்ரெம்ளெட் மற்றும் ஷோஃபீல்ட் மட்டுமே விரைவாக ரன்கள் சேர்த்தனர். இதனால் இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 132 ரன்களை மட்டுமே சேர்த்தது. குல்கர்னி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

தொடர்ந்து எளிய இலக்கை நோக்கி இந்திய மாஸ்டர்ஸ் அணி தரப்பில் குர்கீரட் சிங் மான் – சச்சின் டெண்டுல்கர் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இருவருமே அதிரடியாக ரன்களை விளாசி தள்ளினர். முதல் 2 ஓவர்களிலேயே குர்கீரட் சிங் மான் அதிரடியாக பவுண்டரிகளை விளாசி தள்ளினார். இதன்பின் சச்சின்டெண்டுல்கரும் அதிரடியில் இறங்கினார்.

- Advertisement -

அதிரடியில் சச்சின்

அதிலும் பிரெஸ்னனின் பவுலிங்கில் சச்சின் டெண்டுல்கர் 6, 4, 4 என்று அதிரடியில் வெளுத்து கட்டினார். இதனால் 7 ஓவர்களில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 75 ரன்களை எட்டியது. அதிரடியாக ஆடிய சச்சின் டெண்டுல்கர் 21 பந்துகளில் ஒரு சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட 34 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். இதன்பின் வந்த யுவராஜ் சிங்கும் அதிரடியில் விளாசி தள்ளினார். 

இதனால் 10 ஒவர்களிலேயே இந்திய அணி 100 ரன்களை கடந்து சென்றது. மறுபுறம் சிறப்பாக ஆடிய குர்கீரட் சிங் மான் 32 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். இறுதியாக 11.4 ஓவர்களில் இந்திய மாஸ்டர்ஸ் அணி 133 ரன்களை எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. 35 பந்துகளில் ஒரு சிக்ஸ், 10 பவுண்டரி உட்பட 63 ரன்களுடன் குர்கீரட் சிங் மானும், 14 பந்துகளில் ஒரு சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 27 ரன்களுடன் யுவ்பராஜ் சிங்கும் கடைசி வரை களத்தில் இருந்தனர்.

- Advertisement -