இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி ஏற்கனவே ஒன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது.
இந்த நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடும். இதனால் இந்த போட்டியை எப்படியாவது டிரா அல்லது வெல்ல வேண்டும் என்ற முனைப்பை இந்தியா காட்டியது. ஆனால் முதலில் பேட்டிங் செய்ய பணிக்கப்பட்ட இந்திய அணி 358 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்தியா மோசமான தொடக்கம்:
இதனை அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி இந்திய பந்துவீச்சை சுக்குநூறாக உடைத்தனர். அபாரமாக விளையாடிய ஜோ ரூட் 150 ரன்களும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 141 ரன்களும் எடுத்தனர். இதனால் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 669 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன் மூலம் 311 ரன்கள் பின்தங்கிய இந்திய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோல்வியை தவிர்க்க வேண்டிய உத்வேகத்தில் களம் இறங்கியது. இது சாத்தியமாக வேண்டும் என்றால் இந்திய அணியின் டாப் வரிசை வீரர்கள் பெரிய சதம் அடிக்க வேண்டும்.
சாய் சுதர்சன் அவுட்:
ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் இங்கிலாந்து வீரர் கிறிஸ் வொக்ஸ் வீசிய முதல் ஓவரில் நான்காவது பந்தில் ஜெய்ஸ்வால் ஆட்டம் இழந்தார்.இது இந்திய ரசிகர்களுக்கு பேர் அதிர்ச்சியை தந்தது. இதனை அடுத்து தமிழக வீரர் சாய் சுதர்சன் பேட்டிங் செய்ய களத்திற்கு வந்தார். ஹீரோவாக மாறுவதற்கு சாய் சுதர்சனுக்கு ஒரு நல்ல மேடை கிடைத்தது.
இதையும் படிங்க: நீ தான் யா உண்மையான ஆல் ரவுண்டர்.. 148 ஆண்டுக்கால டெஸ்ட் கிரிக்கெட்டில் 3வது வீரர்.. இந்தியாவுக்கு எதிராக சதம் விளாசிய பென் ஸ்டோக்ஸ்
ஆனால் அவர் எதிர்கொண்ட முதல் பந்திலே ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இதனால் இந்திய அணி 0 ரன்களுக்கு இரண்டு விக்கெட் இழந்து தடுமாறியது. தற்போது நான்காவது நாள் மதிய நேர உணவு இடைவெளியின் போது இந்திய அணி 1 ரன்னுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து இருக்கிறது. இது இங்கிலாந்தின் ஸ்கோரை விட 310 ரன்கள் குறைவாகும்.






