இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல், ஆசிய கோப்பை 2025-க்கு தயாராகும் வேளையில், டி20 போட்டியில் ஆல்ரவுண்டர்களின் முக்கியத்துவம் குறித்து பேசியுள்ளார். செப்டம்பர் 10-ல் துபாயில் நடைபெறவுள்ள ஆட்டத்தில் இந்திய அணி ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொள்ள உள்ளது. இது குறித்து பேசிய மோர்க்கல், ஆல்-ரவுண்டர்கள் அணிக்கு சமநிலையை வழங்குவதால், முக்கியமான ஆட்டங்களில் அவர்களின் பங்களிப்பு முக்கியமாக இருக்கும் என்று மோர்கல் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்திய அணி, இந்த ஆண்டு தொடக்கத்தில் துபாயில் நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்ற பிறகு, ஆசிய கோப்பையில் களமிறங்குகிறது. இது குறித்து பேசிய அவர், “எனக்கு, ஷிவம் துபே போன்றவர்கள் நான்கு ஓவர்கள் வீசக்கூடியவர்களாக இருப்பது எப்போதும் முக்கியம். ஆல்-ரவுண்டர்களை அல்லது வீரர்களை இரு திறன்களிலும் கடினமாக உழைக்க வேண்டும் என்று நான் எப்போதும் வலியுறுத்துகிறேன்.”
“சில சமயங்களில் வீரர்கள் பயிற்சியில் ஒரு திறனில் மட்டும் கவனம் செலுத்துவார்கள். இங்கு, இந்த சூழலில், எந்த ஒரு வாய்ப்பையும் விடாமல் பயன்படுத்த வேண்டும். ஆட்ட நாளில், யாராவது ஒருவர் எங்களுக்கு வெற்றியை தேடி தர வேண்டியிருக்கும்,” என்று மோர்கல் தெரிவித்தார்.முன்னாள் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளரான மோர்கல், அணியில் பகுதி-நேர பந்து வீச்சாளர்களை உருவாக்குவதன் அவசியம் குறித்தும் பேசினார்.
“எங்களிடம் முன்னணி பந்து வீச்சாளர்கள் இருப்பார்கள், அவர்கள் தாக்குதல் நடத்துவார்கள். ஆனால், பகுதி-நேர பந்து வீச்சாளர்களை உருவாக்குவதைத் தொடர்ந்தால், அது அணி தேர்வு மற்றும் கலவைகளில் எங்களுக்கு பல வாய்ப்புகளை அளிக்கும். எனவே, வீரர்களுக்கு அந்த திறன்கள் இருக்கும்போது, அதை தினமும் மேம்படுத்துவது முக்கியம்.”
“எங்களுக்கு, பயிற்சியில் வேலை செய்யும்போது, அதை தீவிரமாக செய்ய வேண்டும். தீவிரத்துடன் பயிற்சி செய்ய வேண்டும். இந்திய சீருடையை அணிந்தவுடன், ஆட்டத்திற்கு தயாராக வேண்டும். இந்த வீரர்கள் களத்திற்கு வந்தவுடன், அவர்கள் தயாராக இருப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.”
இதையும் படிங்க:
“அவர்கள் அணிக்காக ஒரு திடமான செயல்பாட்டை வெளிப்படுத்துவார்கள்” என்று அவர் தெரிவித்தார்.இந்திய அணி லீக் சுற்றில் ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தான் மற்றும் ஓமன் ஆகிய அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் மோத உள்ளன. இவை துபாய் மற்றும் அபு தாபியில் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரு அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும். அதில் முதல் 2 இடம் பிடிக்கும் அணி பைனலுக்கு செல்லும்