இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலக லெஜன்ட்ஸ் சாம்பியன்ஷிப் டி20 லீக்கில் இன்று இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் ருத்ர தாண்டவம் ஆடி இந்திய அணியை பைனலுக்கு அழைத்துச் சென்று இருக்கிறார்கள்.
இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அவர்களின் இந்த முடிவை இந்திய பேட்ஸ்மேன்கள் மோசமானதாக அதிரடி பேட்டிங்கால் மாற்றிவிட்டார்கள். இந்திய அணியின் தரப்பிலிருந்து நான்கு அதிரடி அரைசதங்கள் வந்தது.
இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ராபின் உத்தப்பா 35 பந்துகளில் 65 ரன்கள், கேப்டன் யுவராஜ் சிங் 28 பந்துகளில் 55 ரன்கள், யூசுப் பதான் 23 பந்துகளில் 51* ரன்கள், இர்பான் பதான் அதிரடியாக 19 பந்துகளில் 50 ரன்கள் என அடித்து நொறுக்கினார்கள். இந்தியா சாம்பியன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் அணியின் பந்துவீச்சு தரப்பில் பீட்டர் சிடில் நான்கு விக்கெட் கைப்பற்றினார்.
இதைத்தொடர்ந்து மிக இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு ஷான் மார்ஸ் 4 பந்தில் 2 ரன், ஆரோன் பின்ச் 17 பந்தில் 16 ரன், பென் டன்க் 7 பந்தில் 10 ரன், பெர்குஷன் 19 பந்தில் 23 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் அணி 10 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் எடுத்தது.
இதற்கு அடுத்து தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு பேட்டிங்கில் அதிகபட்சமாக டிம் பெய்ன் 32 பந்துகளில் 40 ரன்கள், குல்டர் நைல் 13 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார்கள். இந்தியா சாம்பியன்ஸ் அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்திய அணியின் பந்துவீச்சில் தவால் குல்கர்னி மற்றும் பவான் நெகி தலா இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.
இதையும் படிங்க : WTC புள்ளி பட்டியல்.. இங்கிலாந்து வெற்றிக்கு பின் அணிகளின் இடங்கள்.. இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்
இன்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வென்று இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் தகுதி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி உலக லெஜன்ஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப்போட்டியில் ஜூலை 13 சனிக்கிழமை இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடுகிறது.






