இன்று டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் அமெரிக்க அணியை மும்பை மைதானத்தில் எதிர்கொண்டது. கேப்டன் சூரியகுமாரின் பொறுப்பான ஆட்டத்தால் இந்த போட்டியில் ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் காய்ச்சல் காரணமாக நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இடம்பெறவில்லை. அவருடைய இடத்தில் முகமது சிராஜ் இடம் பெற்றார்.
இந்திய அணி சொதப்பல்
முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா கோல்டன் டக் ஆனார். இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் இசான் கிஷான் 15 பந்தில் 20 ரன்கள் எடுத்து வெளியேறினார். திலக் வர்மா தன் பங்குக்கு 16 பந்தில் 25 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த சிவம் துபாய் கோல்டன் டக் ஆனார். மேலும் அடுத்தடுத்து ரிங்கு சிங் 14 பந்தில் 6 ரன்கள், ஹர்திக் பாண்டியா 6 பந்தில் 5 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள்.
இதனால் இந்திய அணி பெரிய நெருக்கடியில் சிக்கியது. இதைத்தொடர்ந்து ஒரு முனையில் மிகச் சிறப்பாக விளையாடிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் 49 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 84 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது.
கலக்கல் ஆன பந்துவீச்சு
இதைத் தொடர்ந்து களம் இறங்கிய அமெரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கவுஸ் 9 பந்தில் 6 ரன், முக்கமல்லா 7 பந்தில் 2 ரன் எடுத்தார்கள். இதற்கு அடுத்து கேப்டன் மோனக் படேல் ரன் எடுக்காமல் வெளியேறினார். தொடர்ந்து மிலிந்த் குமார் 34 பந்தில் 37 ரன்கள், சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி முப்பத்தி ஒரு பந்தில் 37 ரன்கள் எடுத்தார்கள்.
இதையும் படிங்க : IND vs USA.. பும்ரா இன்று விளையாடாத காரணம் என்ன?.. சிராஜிக்கு அடித்த டபுள் ஜாக்பாட் – வெளியான தகவல்கள்
இந்த நிலையில் கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய சுபம் ரஞ்சனே 22 பந்தில் 37 ரன்கள் எடுத்தார். இறுதியாக அமெரிக்கா அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் தரப்பில் முகமது சிராஜ் 3 விக்கெட் வீழ்த்தினார். டி20 உலக கோப்பை தொடரில் ஒரு கேப்டனாக ஒரு போட்டியில் அதிக ரன் அடித்தவர்கள் பட்டியலில் சூரியகுமார் நான்காவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். மேலும் சூரியகுமார் யாதவ் நெருக்கடியான நேரங்களில் விளையாட மாட்டார் என்ற விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.






