தற்போது மலேசியாவில் நடைபெற்று வரும் பெண்கள் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி இலங்கை அணிக்கு எதிராக வெற்றி பெற்று அடுத்து சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கிறது.
நடப்பு இந்த உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 16 அணிகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றன. இதில் ஒவ்வொரு பிரிவிலும் இருக்கும் நான்கு அணிகள் தங்கள் பிரிவில் இருக்கும் மற்ற அணிகளுடன் ஒருமுறை மோத வேண்டும். இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் 12 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு, அதில் ஒவ்வொரு பிரிவிலும் ஆறு அணிகள் தங்களுக்குள் மீண்டும் மோதிக் கொள்ளும். இதிலிருந்து நான்கு அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்று இறுதிப்போட்டி நடத்தப்படும்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீராங்கனை திரிஷா மட்டும் தாக்குப்பிடித்து விளையாடி 44 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உடன் 49 ரன்கள் எடுத்தார்.
இதற்கு அடுத்தபடியாக இந்திய அணியில் மிதுலா வினோத் மட்டும் 16 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இலங்கை அணியின் தரப்பில் மிதசரா, லிமன்சா மற்றும் அசேனி தலா இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.
இலக்கை நோக்கி தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு வெறும் 58 ரன்கள் மட்டுமே எடுத்தது. அவர்கள் டி20 கிரிக்கெட்டில் ஒரு ஓவருக்கு மூன்று ரன் கூட எடுக்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அந்த அணிக்கு ராஷ்மிகா செவ்வன்டி அதிகபட்சமாக 12 பந்தில் 15 ரன்கள் எடுத்தார்.
இதையும் படிங்க : வருண் சக்கரவர்த்தி ரஷித் கானை விட பெஸ்ட்.. அதற்கான காரணம் இதுதான் – ஆகாஷ் சோப்ரா விளக்கம்
இந்திய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் தரப்பில் ஷப்னம், ஜோஷிதா, பருணிகா சிசோடியா தலா இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தங்கள் பட்டியலில் மூன்று போட்டியில் மூன்றையும் வென்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.