திடீரென்று பரபரப்பாக மாறிய ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி தொடரை சமன் செய்தது!

0
3553
ICT

இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்துள்ள நியூசிலாந்து ஆண்கள் கிரிக்கெட் அணி முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இழந்த நிலையில் தற்பொழுது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணியை எதிர்த்து மோதி வருகிறது!

ஜார்க்கன்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருக்க இன்று லக்னோவில் இரண்டாவது போட்டி நடைபெற்றது!

- Advertisement -

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதென தீர்மானித்தது. சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான இந்த மைதானத்தின் ஆடுகளத்தில் நியூசிலாந்து பேட்ஸ்மேன்களால் நீடிக்க முடியவில்லை.

இந்திய சுழற் பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம் கொடிகட்டி பறந்தது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக கேப்டன் சான்ட்னர் 19 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு நியூசிலாந்து அணி 99 ரன்கள் எடுத்தது. ஹர்திக், வாஷிங்டன் சுந்தர், குல்தீப், தீபக், சாகல் ஆகியோர் தலா ஒரு விக்கட் வீழ்த்தினார்கள். அர்ஸ்தீப் சிங் இரண்டு ஓவர்கள் பந்து வீசி ஏழு ரன்கள் விட்டு தந்து இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

இதற்கு அடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் கில் 11 ரன், இஷான் கிஷான் 19 ரன் என வெளியேறினார்கள். அடுத்து வந்த ராகுல் திரிபாதி 13 ரன்னிலும், வாஷிங்டன் 10 ரன்னிலும் வெளியேறினார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த சூரியகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் பொறுப்பாக விளையாட, ஆட்டம் இறுதி ஓவருக்கு சென்றது. கடைசி ஓவரில் ஆறு ரன்கள் தேவைப்பட, 19.5 ஓவரில் பவுண்டரி அடித்து சூரியகுமார் இந்திய அணியை வெற்றி பெற செய்து தொடரை சமன் செய்தார். ஹர்திக் பாண்டியா 15 ரன், சூரியகுமார் 26 ரன்கள் எடுத்தனர்!