தற்போது ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 18 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணி தனது முதல் போட்டியில் அமெரிக்க அணிக்கு எதிராக ஆறு விக்கெட் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்று இருந்தது. இந்த நிலையில் இன்று இரண்டாவது போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் தோற்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
வைபவ் சூரியவன்சி சாதனை
இதைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணிக்கு கேப்டன் ஆயுஷ் மத்ரே 12 பந்துகளில் 6 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் 14 வயதான வைபவ் சூரியவன்சி 67 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உடன் 72 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் குறைந்த வயதில் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பையில் அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இதற்கு அடுத்து மிடில் ஆர்டரில் தாக்குப்பிடித்து விளையாடிய அபிக்யான் குண்டு 112 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் யாரும் நல்ல பங்களிப்பு கொடுக்கவில்லை. இதனால் இந்திய அணி 238 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது. பங்களாதேஷ் தரப்பில் அல் பகத் ஐந்து விக்கெட் கைப்பற்றினார்.
இந்திய அணி வெற்றி
இதைத்தொடர்ந்து பங்களாதேஷ் அணி விளையாட வந்த பொழுது மழை அடிக்கடி குறுக்கிட ஆரம்பித்தது. இதன் காரணமாக பங்களாதேஷ் அணிக்கு 29 ஓவர்களில் 165 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. குறைந்த இலக்கை நோக்கி விளையாடிய பங்களாதேஷ் அணி தொடர்ந்து விக்கெட்டுகளை கொடுத்துக் கொண்டு வந்தது.
இதையும் படிங்க: ரோகித் சர்மா டி20 உலக கோப்பை டீம்ல இருந்தேன்.. இப்ப கம்பீர் டீம்ல இல்ல – மனம் திறந்த முகமது சிராஜ்
இதைத் தொடர்ந்து பங்களாதேஷ் அணி இறுதியாக 28.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நடப்பு உலகக் கோப்பையில் இரண்டாவது வெற்றியை தொடர்ந்து பதிவு செய்தது.






