ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய ஏ அணி ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 107 ரன்கள் மட்டும் எடுத்து சுருண்டது.
தற்போது ருதுராஜ் தலைமையிலான இந்திய ஏ அணி ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இன்று தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.
பரிதாபமாக சுருண்ட இந்திய அணி
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய களம் வந்த இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக வந்த அபிமன்யு ஈஸ்வரன் 30 பந்தில் 7 ரன்கள் எடுக்க, இன்னொரு துவக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான ருதுராஜ் சந்தித்த முதல் கோல்டன் டக் ஆகி வெளியேறினார்.
இதை தொடர்ந்து வந்த சாய் சுதர்சன் 35 பந்தில் 21 ரன், தேவ்தத் படிக்கல் 77 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து ஓரளவுக்கு தாக்கு பிடித்தார்கள். இதற்கு அடுத்து பாபா இந்திரஜித் 9, இஷான் கிஷான் 4, நிதிஷ் ரெட்டி 0 முன்னணி பேட்ஸ்மேன் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தார்கள். இந்திய அணி 47.4 ஓவரில் 107 ரன் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் பிரண்டன் டக்கெட் 6 விக்கெட் கைப்பற்றினார்.
ஆஸ்திரேலியா அணிக்கு காத்திருந்த அதிர்ச்சி
இதற்கு அடுத்து பேட்டிங் வந்த ஆஸ்திரேலியா அணிக்கு முதல் மூன்று இடங்களில் சாம் கான்ஸ்டாஸ் 0, மார்கஸ் ஹாரிஸ் 17, பான்கிராப்ட் 0 மூவரும் சொற்ப ரன்னில் வெளியேறினார்கள். இவர்கள் மூவருமே இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் துவக்க ஆட்டக்காரர்களாக விளையாடுவதற்கு பரிசீலிக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இந்திய அணி 3வது டெஸ்டில்.. இதை செய்தே ஆகணும்.. இல்லனா ஆஸியில் கதை முடிந்தது – பாக் பசித் அலி அறிவுரை
இன்று முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியாவின் 39 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் எடுத்து இருக்கிறது. இந்திய அணியின் பந்துவீச்சில் முகேஷ் குமார் மற்றும் பிரசித் கிருஷ்ணா இருவரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்கள்.






