ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ருதுராஜ் தலைமையிலான இந்திய ஏ அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் மீண்டும் படுதோல்வி அடைந்திருக்கிறது.
இந்திய அணி ஆஸ்திரேலிய சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்கு முன்பாக இந்திய ஏ அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. தற்போது இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் இந்திய அணி மோசமான முறையில் தோற்று இருக்கிறது.
இந்திய பேட்ஸ்மேன்கள் தந்த ஏமாற்றம்
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீசியது. முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணிக்கு துருவ் ஜுரல் போராடி 186 பந்தில் 80 ரன்கள் எடுத்தார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 161 ரன் எடுத்து சுருண்டது. ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சில் மைக்கேல் நேசர் 4 விக்கெட் கைப்பற்றினார்.
இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் மார்க்கஸ் ஹாரிஸ் 74 ரன்கள் எடுத்தார். அந்த அணி 223 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் பந்துவீச்சில் பிரசித் கிருஷ்ணா நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றினார். இரண்டாவது இன்னிங்ஸில் 300 ரன்கள் எடுத்தால் போட்டி அளிக்கலாம் என்கின்ற நிலையில் அடுத்து இந்திய அணி களம் இறங்கியது. ஆனால் மீண்டும் இந்திய பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம் தந்தார்கள்.
துருவ் ஜுரலின் இரட்டை போராட்டம்
இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 56 ரன்னுக்கு ஐந்து முக்கிய விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் போராடிய துருவ் ஜுரல் இரண்டாவது இன்னிங்ஸிலும் போராடி அரை சதம் அடித்து 68 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். நிதீஷ் குமார் ரெட்டி 38, தனுஷ் கோட்டியன் 44 ரன்கள் எடுத்தார்கள். இந்திய அணி 229 ரன்கள் எடுத்தது.
ஆஸ்திரேலியா அணி அடுத்து 168 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடியது. அந்த அணிக்கு பேட்டிங் வரிசையில் நான்காவதாக வந்த இளம் வீரர் சாம் காண்டஸ் 73, வெப்ஸ்டர் 46 ரன்கள் ஆட்டம் இழக்காமல் எடுக்க, ஆஸ்திரேலிய ஏ அணி நான்கு விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டி, ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதையும் படிங்க : சாம்சனுக்கு நீதி கேட்டாங்க.. ஆனா அவரே வேறவங்களுக்கு அநீதி செய்யறார் – ஆகாஷ் சோப்ரா வித்தியாச பாராட்டு
இந்திய ஏ அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் தோற்று தொடரை இழந்தது. மேலும் முன்னணி பேட்ஸ்மேன்கள் விளையாடிய விதம் கவலை அளிப்பதாக இருக்கிறது. அதே சமயத்தில் துருவ் ஜுரல் விளையாடிய விதம் நம்பிக்கை கொடுக்கிறது. எனவே அவர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய விளையாடும் அணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்திருக்கிறது!






